பிரபாகரன் மீண்டும் கொலை செய்யப்பாட்டாலும் நாங்கள் சந்தோசப்படுவோம். வியாழேந்திரன் யார்?  எஸ்.எம். சபீஸ்.

(நூருல் ஹுதா உமர்)  எமது உடமைகளை எடுத்துக் கொண்டு எங்களது மக்களை அழிக்க முற்பட்ட பாசிச புலிப்பயங்கரவாதிகள் அழிந்ததில் எங்களுக்கு சந்தோசமே. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதைப் போல் எங்களது மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே  தர்மமாகும். அந்த நீதி பிறழ்வால் பிரபாகரன் அழிந்து போனது வரலாறு என கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்கள் அமைப்பின் பொருளாளரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்
அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், உலகில் 10 வருடங்கள் போராடிய குழுக்களுக்கு  தீர்வு கிடைத்த போது சுமார் 35 வருடங்கள் போராடியவர்கள் மண்ணோடு மண்ணாக அழிந்துபோனதற்கு என்ன காரணம் என நீங்கள் தேடிப் பார்த்தீர்களா? என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழந்திரனை நோக்கி கேள்வியெழுப்பியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் அப்பாவி பொதுமக்கள் அழிக்கப்பட்டது எங்களுக்கும் வேதனைதான். ஆனால் இறைவனின் நீதி தப்பாது. வடக்கு முஸ்லிம்கள் சுமார் 5000 பேர் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட போது ஒருத்தராவது வந்து உங்கள் தாகத்துக்கு தண்ணீர் தரவா என்று கேட்க மனமில்லாத மிருங்கங்களாக மாறியதற்கு தண்டனையே அது.
மெனிக்பாமில் வடக்கு மக்களை கம்பி வேலிக் கூண்டுக்குள்  அடைத்து வைத்திருந்ததனை நேரில் சென்று பார்த்த போது எங்களுக்கு கண்கள் கசிந்தது. இந்த மக்களுக்கு ஏன் இந்த தண்டனை என்று நாங்கள் சிந்தித்த போது எங்களது சகோதரிகளின் கழுத்தில் இருந்த நகைகளைகூட  அறுத்து எடுத்து ஏலம் விட்டபோது அதனை வாங்க இவர்கள் முண்டியடித்ததற்கான தண்டனையே இது என எண்ணத்தோன்றியது.
அந்நேரம் தமிழ் அரசியல்வாதிகள் மிருகங்களை விட மோசமாக எம்மகள் மீது திணிக்கப்பட்ட அநியாயத்திற்கு எதிராக வாய்களை திறக்காமல் இருந்தனர். இவ்வாறு 100க்கணக்கான அசிங்கமான கொலைகளை எங்களால் பட்டியலிட முடியும்.
இப்படியான அக்கிரம செயற்பாடுகளின் பின்னர் தான் வடகிழக்கு இணைப்பை எதிர்க்கின்றோம். அதனால் தான் சிறுபான்மை கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்திய பிரதமருக்கு வடகிழக்கை இணைப்பதற்கான சம்மத கடிதத்தை அனுப்ப முற்பட்டபோது அதனை நாங்கள் (கிழக்கின் கேடயம்) தடுத்து நிறுத்தினோம்.
தமிழ்த் தலைவர்களை  பலமுறை நாங்கள் உரசிப்பார்த்து விட்டோம் அவர்கள் தங்கம் அல்ல பித்தளைகள். பலஸ்தீனத்தில் இன்று நடைபெறுவது அன்று பிரபாகரன் செய்த அதே செயலாகும். முஸ்லிம்களில் உடமைகளை எடுத்துகொண்டு அவர்களது உயிர்களையும் பறிக்கின்றனர். பிரபாகரன் அழிந்தது போல் அங்கும் கொடுங்கோலன் நெதண்யாகு விரைவில் அழிவான். இதனை வியாழேந்திரன் நினைவில் கொள்ளட்டும்.
எல்லா மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என எல்லோரும் இனம் கடந்து சிந்தித்தால் தான் நாடும் முன்னேறும். மக்களும் சிறப்புறுவர் என்று தெரிவித்துள்ளார்.