குரவை ஒலி விண்ணைப்பிளக்க  அம்மனின் குளிர்த்திச்சடங்குக்கான பாரம்பரிய கல்யாணக்கால் நடப்பட்டது.

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு நேற்று (13) திங்கட்கிழமை மாலை கடல் நீர் எடுத்து,  கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது.
 முன்னதாக ஆலயத்தில் தர்மகத்தாக்கள், கப்புகனார்கள் நிருவாகிகள் சேர்ந்து விசேட பூஜை வழிபாடு இடம் பெற்று, பாரம்பரிய மரபு முறைப்படி  பறைமேளம் அடித்து கடற்கரைக்கு சென்று  அங்கு விசேட பூஜை இடம் பெற்று கடல்தீர்த்தம் எடுக்கப்பட்டது.
 அங்கிருந்து நேராக வீதி முழுவதும்  நடைபாவாடை விரிக்கப்பட்டு, கல்யாண கால் (பூவரசு மரக்கிளை) முறித்து எடுக்கப்பட்டு,  பக்தர்களால் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
 ஆலயத்தில் அதற்கான சடங்குகளை செய்து உரிய வேளையிலே அரோகரா கோஷம் மற்றும் குரவை ஒலிக்கு மத்தியில் கல்யாணக்கால் உணர்ச்சி பூர்வமாக சிறப்பாக நடப்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள் கூறைச் சாறிகளை அம்மனின் கல்யாண காலுக்கு சாத்தி வழிபட்டார்கள். மேலும் பலகாரங்கள் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டார்கள்.
ஆலய தர்மகத்தாக்களான  பரமலிங்கம் இராஜமோகன் , இரா.குணசிங்கம் ,சா.கங்காதரன் தலைமையில் இம்முதல் நாள் சடங்கு சிறப்பாக நடைபெற்றது.
சடங்கு விபரம்.
நேற்று முன்தினம் திங்கள் ஆரம்பமாகிய இச்சடங்கு  தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று   21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
நேற்று 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறுகிறது.
தொடர்ந்து இன்று புதன்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெறும்.
20ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள்(21) செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.
எட்டாம்சடங்கு 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7மணிக்கு இடம்பெறும்.