(சுமன்) மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ் அரசியற் கட்சிகள், சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயற்பாட்டின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி பிரதேசத்தில் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அருட்தந்தை க.ஜெகதாஸ் உள்ளிட்ட சிவில் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் சர்வதேச நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனைத் தமிழின அழிப்பு வாரம் என்று பிரகடணப்படுத்தி வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புகள் இந்நினைவேந்தலை அனுஸ்டித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.