இரு தினங்கள் நடைபெறும் நடமாடும் சேவையை மன்னார் மக்கள் நழுவ விடாதீர்கள். அரசு அதிபர் க.கனகேஸ்வரன்.

( வாஸ் கூஞ்ஞ) தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அனைத்து கிராமங்கள் தோறும் உள்ள மக்களுக்கும் கிடைக்கப்பெறுவதற்கான நடமாடும் சேவை மன்னார் மாவட்டத்தில் நடைபெற இருக்கின்றது. இதை நழுவ விடாது பயன்பெற்றுக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு மன்னார் மக்களை வேண்டிக் கொண்டார்.

மன்னாரில் இரண்டு தினங்கள் நடைபெற இருக்கும் நடமாடும் சேவைகள் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் புதன்கிழமை (17) மாலை ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலிலும் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பரிச நாணயக்கார அவர்களின் எண்ணக் கருவில் இராஜாங்க அமைச்சர் புஸ்பகுமார அவர்களின் ஒத்துழைப்புடனும் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களின் பங்களிப்புடனும் இந்த நடமாடும் சேவை மன்னாரில் நடைபெற இருக்கின்றது.

இந்நடமாடும் சேவையானது எதிர்வரும் 20,21.04.;2024 அதாவது சனி , ஞாயிறு ஆகிய இரு தினங்கள் மன்னார் நகர சபை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

இதில் பொது மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய பல்வேறுபட்ட செயற்பாடுகள் இடம்பெற இருக்கின்றது. குறிப்பாக இந்த இரண்டு நாட்களும் இலங்கை மத்திய வங்கி மற்றும் தொழில் திணைக்களங்கள் இணைந்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது.

குறிப்பாக ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் , ஊழியர் பணிக்கொடை தொடர்பான விடயங்களுக்கான பிரச்சனைகள் தீர்வு வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒவ்வொரு பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அவைகளுக்கு ‘சிமாட் போட்’ உபகரணங்கள் தொழில் அமைச்சினால் வழங்கப்பட இருக்கின்றன.

இத்துடன் ஆயிரம் வறிய மாணவர்களுக்கு அவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் முகமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கும் செயற்பாடு;ம் நடைபெற இருக்கின்றது.

மேலும் ‘சிமாட் யுத்’ திட்டத்தின் கீழ் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்றவாறு பொருத்தமான தொழில் வாய்ப்புகளும் வழங்கும் திட்டமும் பயிற்சிகளும் இதற்குள் அடங்குகின்றன.

இதில் 36 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பங்குபற்றுகின்றன. இதனால் இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பெறுவதற்கான சந்தர்ப்பமும் காணப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் முறைசாரா தொழில் புரிவோருக்கும் நன்மை பயக்கும் திட்டங்களும் இந்த நடமாடும் சேவையில் உள்ளடக்கபட்டுள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்களின் இங்குள்ள பிள்ளைகளுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் திட்டங்களும் முன்னெடுக்கப்பட இருக்கிறன.

இந்த இரண்டு நாட்களும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் மருத்துவ முகாமும் நடைபெறுவதுடன் இத்துடன் இரத்ததானம் முகாமும் நடைபெறும்.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை மன்னார் மக்கள் நழுவவிடாது பயன் பெற்றுக் கொள்ளுமாறு மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு வேண்டிக் கொண்டார்.