கிழக்குப் பிரதேசவாதமும் பேச்சளவான கிழக்கு மீட்பர்களும்.ஜி.சிறீநேசன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.

1)கிழக்குப் பிரதேசவாதம் என்பதன் தார்ப்பரியம் என்ன?

வடக்கிலுள்ளவர்களின் தலையீடுகள் இல்லாமல் கிழக்கைத் தாம் ஆள வேண்டும் என்று கிழக்குப் பிரதேசவாதிகள் கூறுகின்றனர்.ஆனால் கிழக்குமண்ணை பேரினவாதிகள் அபகரிப்பதற்கு இந்தப்பிரதேசவாதிகள் உதவுகின்றார்கள்.

2) கிழக்குப் பிரதேசவாதத்தின் பின்னணியிலுள்ளவர்கள் யார்?

வடக்கு கிழக்குத் தமிழர்கள் ஒற்றுமைப்பட்டுப் பலமான சக்தியாக மாறக்கூடாது என நினைக்கும் பேரினவாத அடிப்படைவாதிகளே இதன் பின்னணியில் உள்ளனர்.இவர்களே பிரதேசவாதிகளை இயக்குகின்றனர்.

3) கிழக்குப் பிரதேசவாதத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகள் யாவர்?

சந்திரக்காந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள்,கருணா தலைமையிலான சிறிய குழு,மற்றும் பேரின வாதிகளோடுள்ள வியாழேந்திரன்,கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள்.

4) கிழக்குப் பிர தேசவாதத்தின் பாதிப்பு என்ன?

12 வீதமாகவுள்ள வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் சமூக, பொருளாதார,அரசியல் பண்பாட்டுப் பலத்தினை பலவீனப்படுத்தித் தமிழர்களின் தாயக மண்ணையும், பண்பாட்டு நிலையங்களையும் இலகுவாகப் பேரினவாதம் அபகரிப்பதற்கான தந்திரமே கிழக்குப் பிரதேசவாதத்தின் அடிப்படையாகும்.அதாது தமிழர்களைப் பேரினவாதம் பிரித்தாளும் தந்திரமே பிரதேசவாதமாகும்.

5) இதனை ஏன் பிரதேசவாதிகள் உணர்வதில்லை?

அவர்கள் பேரினவாதிகளின் தேவைக்கு அமையச் செயற்கும் பொம்மைகள் ஆவர். இந்தப் பொம்மைகள் பதவி பணம் படாபடோபங்கள் என்னும் சுயநலத் தேவைகளுக்கு அடிமைகளாகி உள்ளனர்.

6) கிழக்குப் பிரதேசவாதிகள் தம்மைக் கிழக்கின் மீட்பர்கள் என்கிறார்களே?

அவர்கள் பேரினவாதிகளால் கட்டப்பட்டு அவர்களால் இயக்கப்படுகின்றார்கள்.அதனால் அவர்களால் தமிழர்களுக்கு எதனையும் செய்ய முடியாது.

7) ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?

இந்தக் கிழக்கு மீட்பர்கள் 2020 நாடாளுமன்றத் தேர்தலின் போது முழங்கிய முழக்கங்களில் ஒன்று கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தினை ஆட்சிக்கு வந்து 3 நாட்களில் முழுமையான செயலகமாக ஆக்கி விடுவோம் என்றார்கள். குறிப்பாக வியாழேந்திரன் சொன்னார்.ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் நெருங்கி விட்ட போதிலும், அவர் கூறிய 3 நாட்கள் இன்னும் வரவில்லையோ என்று கேட்க விரும்புகின்றேன். பிள்ளையான் சொல்கிறார் தான் ஜனாதிபதி பிரதமருடன் கல்முனை வடக்குச் செயலகம் பற்றிப் பேசினாராம்.அது இப்போதைக்கு நிறைவேறாது என்று சொல்லிவிட்டார்களாம். தம்மால் எதையும் செய்ய இயலாது என்று பிள்ளையான் ஏற்றுக் கொள்வது போல் இவ்விடயம் அமைகின்றது.

8) மயிலத்தமடு, மாதவனைப் பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் 200 நாட்களுக்கும் அதிகமாக வீதியருகில் இருந்து போ ராடுகின்றார் இதனை ஏன் கிழக்கு மீட்பர்களால் தீர்க்க முடியவில்லை?

ரணில் ராஜபக்சக்களின் அரசாங்கமானது கிழக்கு மீட்பர்களை கண்டுகொள்வதில்லை. அவர்களை வெறும் பொம்மைகளாக வைத்து,தமது தேவைக்காகப் பயன்படுத்துகின்றார்கள்.இவர்களது பலவீனத்தை மொட்டு அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்துள்ளது. இதனால்,கிழக்கு மீட்பர்கள் மயிலத்தமடு மாதவனைப் பற்றிக் கூறினாலும் அரசாங்கம் காதில் போடுவதில்லை.

9) கிழக்கு மீட்பர்கள் வீதிகள் அமைக்கிறார்கள்தானே?

மக்களிடம் இருந்து அறவிடப்படும் வரிப்பணத்திற்கு பதிலீடாக அதையாவது செய்ய வேண்டியுள்ளது. மேலும் வீதிகள் அமைப்பதால் 10 வீதமளவில் கொமிசன் மீட்பர்களுக்குக் கிடைப்பதாக அறியமுடிகின்றது.100 கோடி ரூபாய்கள் கொண்ட அபிவிருத்தியில் முன் கொடுப்பனவுக் கொமிசனாக 10 கோடி போய் மீட்பர்களின் பைகளுக்குள் சேர்வதாக மக்கள் பேசுகின்றார்கள். கடன்பட்ட பணத்திலும் கையூட்டுக்குக் குறைச்சல் இல்லை என்று தகவல்கள் வெளியாகின்றன.

10) கையூட்டுகள் பெறுவதற்கும் கிழக்கு மீட்பர்கள் காரணம் சொல்கிறார்களாமே?

தமது கட்சிக்கான நிதியம் என்று கையூட்டினைக் கெளரவப் படுத்துகின்றார்களாம்.

11) மட்டக்களப்பு வடமுனை நெலுக்கல் மலையில் பௌத்த மத ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளதாமே?

அங்கு 5 கிலோ மீட்டர் வீதியினை வீதியமைப்புத் திணைக்களம் அமைத்துள்ளது. அவ்வழியால் சென்று மலையையடையும் பிக்குகள், படையினர் பெளத்த மத வழிபாட்டு நிலையத்தை அமைத்துள்ளனர்.

12) அங்கு பெளத்தர்கள் உள்ளனரா?

இல்லை,இனிக்குடியேற்றங்கள் அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

13 ) இவையெல்லாம் கிழக்கு மீட்பர்களின் கண்களுக்குத் தெரியாமல் நடைபெறுகின்றனவா?

தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் மீட்பர்களால் எதுவுமே செய்ய முடியாது. அவர்களது ஒப்புதலுடன் நடைபெறுவதாகவும் கூறலாம்.

14) எதனையும் செய்ய முடியாது என்றால் கிழக்கு மீட்பர்கள் தேவைதானா?

தமிழர்களுக்குத் தேவையே இல்லை. ஆனால் உலகத்தை ஏமாற்றி ஸ்ரீலங்கா அரசு தப்பிப் பிழைப்பதற்கு கிழக்கு மீட்பர்கள் தேவையாகவுள்ளனர் பேரின வாதிகளுக்களின் தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைக்கு தமிழ்ப் பொம்மைகள் தேவையாக உள்ளனர்.தம்முடனும் தமிழர்கள் இருப்பதாக் காட்டுவதற்கும்,தமிழர்களுக்குப் பிரச்சினைகள் இல்லை என்று ஒப்புதல் அளிப்பதற்கும் பிரதேசவாதிகள் அவசிய தேவைப்பொருளாகி உள்ளனர்.

15) தமிழர்களுக்குத் தேவை அற்றவர்களை தமிழர்கள் ஏன் தெரிவு செய்கின்றார்கள்?

பல கோடி மோசடிப் பணம் தேர்தல் முதலீடாக்கப்பட்டு குறுக்குவழிகளில் பணம்,மதுபானம்,வடிசாராயம், பார்சல்கள்,கையூட்டுகள் போன்ற தவறான வழிகளால் வெற்றிக்கனியை மீட்பர்கள் சுவைக்கிறார்கள். மோசடியில்லாத தேர்தல்கள் இடம் பெற்றால்,மீட்பர்கள் தோல்வி அடைந்தே விடுவார்கள்.

16) மொட்டுக் கட்சியின் மீட்பர்கள் ஒட்டிக் கொள்வதற்கான காரணம் என்ன?

கடந்த காலத்தில் செய்த பாரிய குற்றங்களில் இருந்து தப்பிக் கொள்வது ஒரு விடயம். மற்றையது, அவர்களுடன் இணைந்தால் தேர்தங்களில் எந்த வழியிலாவது வெல்வதற்கு வழி திறப்பார்கள் என்பதும் இன்னும் ஒன்றாகும். இதை விடவும் பதவிகளைப் பெறலாம்.தவறான வழிகளில் கறுப்புப் பணம் உழைத்தாலும் மொட்டுக் கட்சியினர் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதும் மேலுமோர் விடயமாகும்.

17) கடந்த 2020 தேர்தல் பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?

கோத்தபாய ஜனாதிபதியான பின்னர்,அவரது சகோதரனின் நெறிப்படுத்தலின் கீழ் கையாளப்பட்ட தேர்தலில் தமது கட்சியில் யார் வெல்ல வேண்டும் என்பதும், மற்றைய கட்சிகளில் யார் வெல்லக் கூடாது என்பதும் தீர்மானிக்கப்பட்ட தேர்தலாகவே அது அமைந்தது. மட்டக்களப்பு வாக்குக் கணிப்பு நிலையத்தில் வாக்குகளை மீள எண்ணுவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட போதும் அந்த வேட்பாளருக்கான உரிமை அப்பட்டமாக மறுக்கப்பட்டது. தலைமை அதிகாரியான அரச அதிபர் கலாமதி அப்பட்டமாக ஆளும்கட்சி சார்பான முகவர் போன்று செயற்பட்டார். அதற்கு ஏற்ப தலைமைக் கணக்கிடும் அதிகாரிகள் சிலரும் அவரது வழிகாட்டலில் செயற்பட்டார்கள்.

18) மேற்படி பாரபட்சமான தேர்தலை இனி வருங்காலத்தில் எவ்வாறு தவிர்க்கலாம்?

உள்ளூர்க் கண்காணிப்புகள் மட்டுமல்லாமல் சர்வதேசக் கண் காணிப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.தேர்தல் சட்டங்கள் இறுக்கமாக அமுலாக வேண்டும்.மக்கள் மற்றும் வாக்காளர்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். குற்றவாளிகளைக் கதாநாயகர்கள் ஆக்கும் மோசடி வேலைகள் நிறுத்தப்பட வேண்டும்.சென்ற தேர்தலில் 20 கோடி ரூபாய் முதலிட்ட மீட்பர் ஒருவர் இம்முறை 50 கோடி ரூபாய் முதலிடப் போகிறாராம் என்று தகவல் கசிந்துள்ளது.