மேம்பட்ட கல்வி மூலம் பிளவுபட்ட நாட்டை ஒன்றிணைக்க முடியும். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

நாட்டில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் என பல பிரச்சினைகள் இருந்து வருகிறது. பல்வேறு காரணங்களால், சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள் இன, மத, சாதி, குலம் எனப் பிரிந்துள்ளனர். இவ்வாறு பிளவுபட்டுள்ள நாட்டை ஒன்றிணைக்க இலவச மற்றும் மேம்பட்ட கல்வி முறையே சிறந்த வழியாகும். கல்வி, அறிவு, புத்திசாலித்தனம் மூலம் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவினைகளை நீக்கி, ஒன்றாக வாழக்கூடிய வலுவான நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது இலங்கை நாடு என்பது அனைத்து இனம், மதம், சாதி, சிங்களம், தமிழ், முஸ்லிம், பர்கர் போன்ற அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. இனம், மதம் குறித்து பேசுவதை விடுத்து, “இலங்கையர்” என்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 143 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 04 ஆம் திகதி இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், ​​கல்லூரியின் நடனம்,வாத்தியம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.

கல்வியின் மூலம் ஒற்றுமை,இணக்கம், நல்லிணக்கம் ஆகியவற்றை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் பிரகாரம், நாட்டில் உள்ள பாடசாலைகளை மேம்படுத்துவதே தமது நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

சிங்களம் மட்டும் எனச் சொல்லி, தமிழ் மட்டும் எனச் சொல்லி பாடசாலை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது என்பதனால், ஆங்கில மொழியை சரளமாக கையாளக்கூடிய பிள்ளைகளை தற்போதுள்ள கல்வி முறை ஊடாக உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

சிங்களம், தமிழ் என இனத்தை மதத்தை அரசியல் இலாபங்களுக்காக பயன்படுத்த முடியும் என்றாலும், இலங்கைக்கு இவ்வாறான அரசியல் அனுகூலங்கள் அவசியமில்லை. இத்தகைய போக்குகளால் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. மேம்பட்ட சமூகத்தில் புத்திஜீவிகளை உருவாக்கும் வேலைத்திட்டம்தான் நாட்டுக்குத் தேவை. இதற்கு இனம், மதம், சாதி, குலம், அந்தஸ்து போன்ற அனைத்தையும் மறந்து விட்டு செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.