கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக்கவும் இன்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவரத்தி ஏற்றி தங்களது கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோடீஸ்வரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தமிழரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர்செல்வராசா கணேஷ்ஷானந்தம் ஆகியோரும் பங்கேற்று இருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவது நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் எனவும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதற்கான செயற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச்செயல் என எடுத்துரைத்திருந்தார்.
மேலும் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய நீதியைப் பெற்றுத் தராத இந்த பிரதேச செயலுக்குரிய அதிகாரங்களை பெற்று தர முடியாத அரசாங்கம் எவ்வாறு வடகிழக்கு மக்களின் அதிகாரத்தை எந்த வகையில் தர முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.