தென் சீனக்கடலில் சீனாவின் செயற்கைத் தீவு!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(கடந்த சில ஆண்டுகளாகவே தென்சீனக் கடலில் தனது கடல் எல்லைக்கு அப்பாலும் வல்லாதிக்கத்தை விரிவு செய்யும் சீனாவால், அண்டை நாடுகள் அவதியடைவது சர்வதேச பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது.
இதேவேளை தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், தென் சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆதரவளிப்பதாக இந்தியா கூறியிருப்பது, சீனாவை திகைக்க வைத்துள்ளது)
தென் சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கொண்டாடும் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நீண்டகாலமாக நிலவுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே தென்சீனக் கடலில் தனது கடல் எல்லைக்கு அப்பாலும் வல்லாதிக்கத்தை விரிவு செய்யும் சீனாவால், அண்டை நாடுகள் அவதியடைவது சர்வதேச பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது.
பிலிப்பைன்ஸ் சீனா முறுகல்:
இதேவேளை தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில், தென் சீனக் கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஆதரவளிப்பதாக இந்தியா கூறியிருப்பது, சீனாவை திகைக்க வைத்துள்ளது.
இந்த வாரம் தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் ராணுவக் கப்பல் மீது சீன கடலோரக் காவல்படை நீர் தாக்குதல் நடத்தி மூன்று வீரர்கள் காயமடைந்ததாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அரசு பெய்ஜிங்கில் உள்ள தனது தூதரக அதிகாரியை திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பைன்ஸிலிருந்து 105 கடல் மைல் தொலைவில் தென்சீனக் கடலில் பயணித்த பிலிப்பைன்ஸ் இராணுவக் கப்பல் மீது இந்த நீர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் சீனக்கடல் முறுகலால், சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் இராஜதந்தர நடவடிக்கை எடுத்துள்ளது. கப்பல் பலத்த சேதம் அடைந்ததுடன், சீனக் கடலோரக் படையினரின் வன்முறைச் செயலை வன்மையாகக் கண்டிப்பதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை:
இந்த விஷயத்தில் இந்தியா தனது இறையாண்மை உரிமைகோரல்கள் மற்றும் கடல்சார் நலன்களை மதிக்க வேண்டும் என்றும் மூன்றாம் தரப்பினருக்கு தலையிட உரிமை இல்லை என்றும் இன்று சீனா தெரிவித்துள்ளது.
இதேவேளை தென் சீனக் கடல் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த வருடமும் தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்ற
போது இரு கப்பலும் மோதுவதுபோல் அருகருகே வந்தன.
பிலிப்பைன்ஸ்க்கு அமெரிக்க உதவி:
பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
அப்போது சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், சீனா அதன் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடத்தையில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவை பதிலடிக்கு தூண்டும் என்றார். சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா கடந்த வருடம் தெரிவித்தது.
சீனாவின் செயற்கைத் தீவு :
தென் சீனக்கடலின் மேற்பரப்பில் மீன் வளம் என்றால் கடல் ஆழத்தில் ஹைட்ரோகார்பன் என அபரிமிதமான இயற்கை கொடை சூழந்த கடல்வெளியைச் சீனா தனி பாணியில் வளைத்துப் போட்டது. தென்சீனக் கடலில் சிதறிக்கிடக்கும் மனிதர்கள் வாழத்தகுதியற்ற தீவுகளை முதலில் ஆக்கிரமித்தது.
பின்னர், அதை ஒட்டியே செயற்கைத் தீவு தொகுப்புகளை பிரம்மாண்டமாய் உருவாக்கியது. பின்னர் அந்தத் தீவுகளில் விமான தளம், படையணிகளைக் குவித்து அங்கிருந்தும் தனக்கான புதிய கடல் எல்லையை விரிவுசெய்தது சீனா.
ஒரு தேசத்தின் நிலப்பரப்பிலிருந்தே குறிப்பிட்ட கடல் மைல்களில் அதன் கடல் எல்லைகள் தீர்மானிக்கப்படும். கடல் மத்தியில் நிலப்பரப்பை நீட்டிப்பதன் மூலம் கடல் எல்லையையும் முறைகேடாய் நீட்டித்திருக்கிறது சீனா.
இந்த அத்துமீறல் ஆக்கிரமிப்புகளால் அண்டை நாடுகளின் கடல் எல்லைகள் அடிவாங்க ஆரம்பித்தன. அதன் மீன்பிடிப்பு முதல் கடல் ஆராய்ச்சி, பாதுகாப்பு போன்றவையும் கேள்விக்குள்ளாகின.