( வி.ரி. சகாதேவராஜா) இந்தியாவில் இருந்து வருகைதந்த அகில உலக ராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் ஶ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த காரைதீவு மண்ணுக்கு நேற்று (27) புதன்கிழமை மாலை விஜயம் செய்தார்.
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 132 ஆவது பிறந்த தினத்தில் அவர் அங்கு விஜயம் செய்தார்.
முதலில், சுவாமி ராமகிருஷ்ண மிஷன் சாரதா நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்தார் .
அவருடன், இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மாநந்தா ஜீ மகராஜ், மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரர்ச்சிதானந்தா ஜீ மகராஜ் ஆகியோரும் வருகை தந்தனர். மட்டக்களப்பு
இ.கி.மிஷன் அபிமானிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அங்கு நாளைய தினம்(29) திறந்து வைக்கப்பட இருக்கின்ற குடும்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார்.
சாரதா இல்ல செயற்பாடுகளையும் அவதானித்தார்.
அதன் பின்பு குழுவினர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த இல்லத்திற்கு விஜயம் செய்தார்கள்.
அங்கு சுவாமிகளின் திருவுருவச்சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்ததுடன், இல்லத்தில் விசேட பூஜையையும் நடத்தினார்கள்.
அங்குள்ள அருங்காட்சியகம், யாழகம் போன்றவற்றை பார்வையிட்டு வியப்படைந்தார். சுவாமி தொடர்பான ஆவணங்களை கண்டு ஆர்வத்துடன் பார்த்து பாராட்டினார்.
அச்சமயம் பணிமன்ற ஆலோசகர் விரி.சகாதேவராஜா, தலைவர் சோ.சுரநுதன் ,செயலாளர் கு.ஜெயராஜி ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
அங்குள்ள விபுலானந்த நர்த்தனாலயத்தில் பயிலும் நடன மாணவிகளுக்கு சுவாமி ஆசீர்வாதம் வழங்கினார்.