கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு

வி.சுகிர்தகுமார்

   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் இன்று (26) வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைவாக அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையிலும் வைத்தியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் அவசர சேவை சிகிச்சை பிரிவு தவிர்ந்த ஏனைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அன்மையில் ஏற்பட்ட மாணவனின் மரணித்தின் பின்னராக இடம்பெற்ற மக்களது ஆர்ப்பாட்டம் மற்றும் வைத்தியசாலையின் உடமைகள் சில தாக்கப்பட்டதை கண்டித்தோ இன்று முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் அடையாளப்படுத்தப்பட்டும் பொலிசாரால் உரியவர்கள் கைது செய்யப்படவி;ல்லை என்பதை தெரிவித்தே இப்பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவினர் பல்வேறு பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட நிலையிலும் வைத்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட சில விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதுடன் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னரே வைத்திய சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேநேரம் 15 நாட்களுக்கும் மேலாக திருக்கோவில் வைத்தியசாலை மூடப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதியில் பாம்பு கடியினால் தீண்டப்பட்ட ஒருவர் மரணித்துள்ள நிலையில் இன்னுமொருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.
அத்தோடு சுமார் 30 ஆயித்திற்கும் மேற்பட்ட மக்களின் தேவையினை பூர்த்தி செய்து வந்த வைத்தியசாலையின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வயோதிபர்கள் சிறுவர்கள் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்ற வந்தவர்கள் என அனைவரும் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் பெரும் தொகை பணதத்pனை செலவு செலவு செய்து தொடர்ச்சியாக தனியார் வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாதுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளதுடன் ஏழை நோயாளிகள் மீது கருணை கொண்டு வைத்திய சேவையை மீள ஆரம்பிக்குமாறு பொது மக்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு மக்களின் உயிர்களை கேடயமாக பயன்படுத்தாது சம்பந்தப்பட்ட தரப்பினர் துரிதமாக நடவடிக்கைகளைக் முன்னெடுத்து  வைத்திய சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவவுமாறு நோயாளிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்