( வாஸ் கூஞ்ஞ)
கடந்த காலத்தைப்போல் அல்லாது இப்பொழுது விளையாட்டில் கவனம் செலுத்துவோர் குறைந்து செல்லுகின்றனர். ஆகவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் இவ்வாறான போட்டிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் பொறுப்பும் எமக்கு இருக்கின்றது என இராஜங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக்கினால் கடந்த சில மாதங்களாக நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டிகளின் வெற்றியீட்டிய அணிகளுக்கும் மற்றும் கடந்த காலத்தில் கரபந்தாட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழா துள்ளுக்குடியிருப்பில் சனிக்கிழமை (23) நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
விளையாட்டுத் துறையை நோக்கும்போது இன்றையத் தினம் எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
மன்னார் மாவட்டத்திலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகி வருகின்றபோதும் அது தற்பொழுது குறைவடைந்து வருவதை உணரக்கூடியதாக இருக்கின்றது.
இவற்றை ஈடு செய்யும் நோக்குடன் இவ்வாறான விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்படுவது சாலச் சிறந்ததாக அமைகின்றது.
இதன் ஏற்பாட்டாளர்கள் எம்விபிஎல் மற்றும் எம்டீவீஏ அமைப்பினருக்கும் நான் இந்த நேரத்தில் நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கின்றேன்.
கடந்த காலத்தைப்போல் அல்லாது இப்பொழுது விளையாட்டில் கவனம் செலுத்துவோர் குறைந்து செல்லுகின்றனர்.
ஆகவே இதை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் இவ்வாறான போட்டிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும் பொறுப்பும் எமக்கு இருக்கின்றது.
இப்பொழுது இளைஞர்கள் தீய வழிகளுக்கு செல்லக்கூடிய நிலைகள் காணப்படுகின்றன.
ஆகவேதான் நாம் இளைஞர்களை ஒன்றுக் கூட்டி இவ்வாறான விளையாட்டுக்களில் ஊக்கப்படுத்தி தீய வழிகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
அத்துடன் விளையாட்டுக்களில் ஊக்கமாக இருந்தவர்கள் சாதனைப் படைத்தவர்களை மறக்காது அவர்களையும் இன்றைய நாளில் நினைவு கூர்ந்து கௌரப்படுத்துவது மிகவும் பெருமையாக இருக்கின்றது.
இந்த போட்டிகளில் மூன்று அணிகள் வெற்றியாளர்களாக காணப்பட்டாலும் ஏனையவர்களின் முயற்றி தொடருமாகில் எதிர்காலத்தில் அவர்களும் இந்த நிலைக்கு வர சந்தர்ப்பம் உண்டு என்பதை மறக்கக் கூடாது.
ஏனென்றால் உங்களுக்கும் தேசிய மட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்புக்கள் நிச்சயம் உருவாகும் என்பதை மறக்கக் கூடாது.
உடற் பயிற்சிகள் தற்பொழுது குறைந்து செல்வதால் பலருக்கு சிறு வயது தொடக்கம் வியாதிகள் ஏற்பட்டு வருவதையும் நாம் காண்கின்றோம்.
ஆகவே உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு விளையாட்டு அவசியம் என்பதும் யாவருக்கும் தெரிந்த விடயமாகும்.
இங்கு விளையாட்டுத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு விரைவில் இதற்கான அமைச்சரை அழைத்து வந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றேன்.
இந்த துள்ளுக்குடியிருப்பு கரப்பந்தாட்ட மைதானத்தை மேலும் மிருகூட்டும்படி கேட்கப்பட்டுள்ளது. இதன் மட்டிலும் கவனம் செலுத்தப்படும் விளையாட்டு அதிகாரி ஜெஸ்மின் அவர்களின் முயற்சிக்கு எனது ஒத்துழைப்பு கிடைக்கும் என இவ்வாறு தெரிவித்தார்.