( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக்கினால் கடந்த சில மாதங்களாக நடாத்தப்பட்ட கரபந்தாட்டப் போட்டிகளின் வெற்றியீட்டிய அணிகளுக்கும் மற்றும் கடந்த காலத்தில் கரபந்தாட்டப் போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு விழாவாக இடம்பெற்றது.
மன்னார் கரப்பந்தாட்ட பிரீமியர் லீக் விளையாட்டுப் போட்டியானது மன்னார் மாவட்டத்திலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களையும் தேசிய ரீதியில் சிறந்த வீரர்களையும் மற்றும் தேசிய மட்டத்திலான பயிற்று விப்பார்களையும் கொண்டு எட்டு அணிகளைக் கொண்டதாக இப்போட்டிகள் இடம்பெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய ஒவ்வொரு அணிகளும் தேசிய அணிகளிலிருந்து தலா இருவரை தங்கள் அணிகளுடன் இணைத்து விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் இறுதி போட்டிகளில் தெரிவு செய்யப்பட்ட முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு எம்டீவீஏ தலைவர் சிறீ விக்கிரம கீர்த்தி ஜி.ஸ்ரீபன் தலைமையில் சனிக்கிழமை (23) மாலை 7.30 மணியளவில் துள்ளுக்குடியிருப்பு கரபந்தாட்ட மைதானத்தில் மிக சிறப்பாகக் நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது இந்த மூன்று அணிகளின் கண்காட்சி போட்டிகளும் இடம்பெற்றது.
இதன் போட்டிகள் 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 64 போட்டிகள் நடைபெற்றதிலிலேயே இந்த மூன்று அணிகளும் தெரிவு செய்யப்பட்டன.
இதன் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத் தலைவருமான கே.காதர் மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டார்.
-இதில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் . மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் மதத் தலைவர்களாக அருட்பணி லோறன்ஸ் லியோன் , தாராபுரம் மௌலவி எம்.எஸ்.முகமது உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
அத்துடன் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களால் ஒதுக்கப்பட்ட 15 இலட்சம் ரூபாவில் புனரமைப்பு செய்யப்பட்ட கரபந்தாட்ட மைதானம் சம்பிராதய முறைப்படி திறந்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.