“வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்”
உதவும் கரங்கள் நிறுவனம் நடத்திய
இந்தியா- தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சிறப்புப் பட்டிமன்றங்கள் நிகழ்த்திய *கதிரவன் பட்டிமன்றப் பேரவை* பேச்சாளர்களுக்கான
தாலாட்டும் பாராட்டும் நிகழ்வும் 134 ஆவது சிறப்புப் பட்டிமன்றமும் உதவும் கரங்கள் சிறுவர் இல்லம், மயிலம்பாவெளி மட்டக்களப்பு (23.03.2024) இல் இடம்பெற்றது.
உதவும் கரங்கள் தலைவரும், கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய ச. ஜெயராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி, காணி அபிவிருத்தி, நீர் வழங்கள், மகளிர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு மூ. கோபாலரத்தினம் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.
சிறப்பு அதிதிகளாக திரு சி. தில்லைநாதன் மன்முனைபற்று கோட்டக்கல்வி அதிகாரி, திரு அ.ஜெயநாதன் தொழில் வழிகாட்டும் உத்தியோகத்தர் வலயக்கல்வி அலுவலகம் மட்டக்களப்பு, மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் திரு இ. சிவலிங்கம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக காந்தி சேவா சங்கத் தலைவர் அரிமா அ.செல்வேந்திரன் , சிவ தொண்டர் திருக்கூடத் தலைவர் சிவ தொண்டன் க. கமல்ராஜ் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
வரவேற்புரையினை ஏராவூர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளரும், உதவும் கரங்கள் உப தலைவருமான திரு த. ராஜமோகன் அவர்கள் நிகழ்த்த நன்றி யுரையினை உதவும் கரங்கள் பொருளாளரும், தாய் சேய் நல சுகாதார வைத்திய அதிகாரியும் ஆகிய வைத்தியர் க.கிரிசுதன் அவர்களும் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வின் பிரதான அம்சமாக மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்ற பேரவையின் 134 வது சிறப்பு பட்டிமன்றம் இடம் பெற்றது.
மாணவர்களின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு போதும்- போதாது எனும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் பட்டிமன்றப் பேரவை தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமை வகிக்க, போதும் எனும் அணியில் கவிஞர் அழகுதனு , கவிஞர் சோலையூரான் ஆகியோரும் போதாது எனும் அணியில் கவிஞர் அன்பழகன் குரூஜ், மட்டுநகர் சிவ வரதகரன் ஆகியோர் பங்குபற்றினர்.
பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், பேரவைத் தலைவர் கதிரவன் த. இன்பராசா அவர்கள் கலை- இலக்கியம்- பண்பாடு மற்றும் சமூக முன்னேற்ற நற்பணிகளில் ஓயாது செயலாற்றும் நற்பணியை பாராட்டி “சொல்லருவி” எனும் சிறப்புப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
காந்தி சேவா சங்கத் தலைவர் கலாநிதி அரிமா அ. செல்வேந்திரன் அவர்கள் உதவும் கரங்கள் நிறுவனத் தலைவர் ச. ஜெயராஜா அவர்களின் ஓய்வில்லாத மெச்சத்தக்க சமூகப்பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.