திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் ஒருவர் உட்பட 6 பேர் கைது–

handcuffed arrested man behind prison bars. copy space

(கனகராசா சரவணன்)

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக  வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 6 பேரையும் எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வெள்ளிக்கிழமை (22) உத்தரவிட்டார்.

கடந்த திங்கட்கிழமை (11) ம் திகதி திருக்கோவில் மெதடிஸ்த மாகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியை முன்னிட்டு இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய திருக்கோவில் 3 ம் பிரிவு துரையப்பா வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஜெயக்குமார் விதுர்ஜன்; என்ற மாணவன் மயங்கிவீழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச் சம்பவத்தையடுத்து திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் கவலையீனமாக குறித்த மாணவன் உயிரிழந்தார் என குற்றம்சாட்டு தெரிவித்து வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்று திரண்ட பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட் நிலையில் வைத்தியசாலை மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியதில் கட்டிடத்தின் பல யன்னல் கண்ணாடிகள் உடைந்து தேசமடைந்ததுடன் வைத்தியசாலை பெயர்  பலகையை உடைத்து சேதப்படுத்தியதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் விசேடஅதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை இடம்பெற்ற நிலையில் ஆர்ப்பாட்டகாரர்கள் 5 மணித்தியால ஆர்ப்பாட்டத்தையடுத்து அங்கிருந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து உயிரிழந்த மாணவன் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசேதனையில் கண்டறியப்பட்டதுடன் அவரின் உடல் கூறுகள் அரசபகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன் சடலம் கடந்த 12 ம் திகதி உறவினரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அரச சொத்தான வைத்தியசாலை கட்டிடத்திற்கு சேதம் விளைவித்தவர்களை கைது செய்யுமாறு கோரி கடந்த 10 நாட்களுக்கு மேல் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வைத்தியசாலை செயற்பாடுகள் அனைத்தும் செயழிழந்துள்ளது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த 50 பேரை இனங்கண்டு கொண்ட பொலிசார் பெண் ஒருவர் உட்பட 6 பேரை வெள்ளிக்கிழமை (22) கைது செய்து அவர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவர்களை எதிர்வரும் 4ம் திகதி வரையுமான 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அதேவேளை வைத்தியசாலைக்கு சேதம் விளைவித்த ஏனைய  45 பேரை தேடி கைது செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.