தோற்கடிக்கப்பட்டது பாராளுமன்ற சம்பிரதாயமும், சபாநாயகர் பதவிக்குரித்தான பெருமையுமே தவிர

எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா

(சுமன்)

இன்று தோற்கடிக்கப்பட்டது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, மாறாக பாரம்பரிய பெருமைமிக்க எமது பாராளுமன்ற சம்பிரதாயமும், வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தில் ஒரு சபாநாயகர் பதவிக்குரித்தான பெருமையுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டதென்பது எமது நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதை ஆளும் தரப்பு விளங்கிக் கொள்ள வேண்டும். ஆளுந்தரப்பினால் சபாநாயகர் என்ற உயர் பதவி சீரழிக்கப்பட்டுள்ளது என்பதுவே உண்மையாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமாக கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு சுதந்திரமடைந்த காலம் முதல் இன்றுவரை எமது பாராளுமன்ற வரலாற்றில் இடம் பெறாத பிரேரணையொன்றின் மீதான விவாதம் ஒன்றில் உரையாற்றுகின்றேன்.

எமது நாட்டின் பதவித் தரநிலையின்  (Protocol) அடிப்படையில் ஜனாதிபதி, பிரதமர் போன்ற பதவிகளுக்கு அடுத்த மூன்றாவது தர நிலையிலுள்ள பதவி சபாநாயகர் பதவியாகும். சபாநாயகர் பதவியென்பது ~வெஸ்ட் மினிஸ்ரர்’ பாராளுமன்ற சம்பிரதாயத்தின் அடிப்படையில் உருவான பதவியாகும். இது பாராளுமன்றத்தின் அதியுயர் கௌரவ பதவியும் கூட.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தின் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டால் அவர் தான் தெரிவு செய்யப்பட்ட கட்சியிலிருந்து விலகியவராகவே கருதப்பட்டு தனது கடமையினைப் பொறுப்பேற்பார். சபாநாயகர் பதவியின் இன்னுமொரு உயர் கௌரவம் என்னவெனில் பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தில் ஒருவர் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்டால் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிடும் போது அந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து எந்தக் கட்சிகளும் தமது வேட்பாளரை நிறுத்துவது இல்லை என்பது ஒரு சம்பிரதாயமும் கூட இத்தகைய உயர் பண்பு மிக்க மாண்புமிக்க பதவி சபாநாயகர் பதவியாகும்.

அத்தகைய வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தை அவ்வாறே பின்பற்றும் எமது பாராளுமன்றத்தில் அத்தகைய பெருமைகொண்ட சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டதென்பது எமது நாட்டின் பாராளுமன்ற வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய விடயமே தவிர, பெரும்பான்மை வாக்குகள் பெற்று எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த இப்பிரேணையை தோற்கடித்துவிட்டோமென்று ஆளும் தரப்பு பெருமை கொள்ளக்கூடிய விடயமல்ல.

சபாநாயகருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதற்கான உடனடிக்காரணம் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக்காப்புச் சட்டமாகும். அண்மைக்காலத்தில் அவசர கோலத்தில் சட்ட வரைவாக்கப்பட்டு அதே அவசரத்தில் வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சட்டமூலமாகச் சமர்ப்பிக்கப்பட்டு ஆளும் கட்சி உறுப்பினர்கள் தவிர அனைத்து அரசியல் கட்சியினராலும் சமூக ஆர்வலர்களாலும், தன்னார்வத் தொண்டர்களாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்களாலும் சர்வதேச மனித உரிமை நிறுவனங்;களாலும் தமது கவலையையும் கரிசனையையும் வெளியிட்ட நேரத்திலும் கூட அத்தனையையும் புறக்கணித்து அவசர கோலத்தில் இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் உட்பட பெயரளவில் ஜனநாயகம் நிலவும் நாடுகளில் கூட இத்தகைய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இச்சட்டம் கொண்டுவரப்பட்ட போது இச் சட்டம் தொடர்பாக பல வருடங்கள் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை பல்வேறு தரப்பினருடனும் பல்வேறு நிறுவனங்களுடனும் மூன்று நான்கு வருடங்கள் முறையான  கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே சட்டமாக நிறைவேற்றப்பட்டது. எமது நாட்டின் நிகழ்நிலைக்காப்புச் சட்டம் ஓரளவுக்கு சிங்கப்பூரின் சட்டத்தை ஒத்ததாக நான் கருதுகின்றேன். சிங்கப்பூரின் ஜனநாயகத் தன்மைபற்றி இச்சபையில் நான் உரையாற்ற விரும்பவில்லை. இச் சட்டமூலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு முரணாக பல பிரிவுகள் உள்ளன. இவை சீர் செய்யப்படவேண்டும் அவ்வாறு இத்தகைய விதப்புரைகள் சீர்செய்யப்படாதவிடத்து அரசியலமைப்புக்கு முரணானதாகவே இச்சட்டம் கருதப்படும் என்பது மாத்திரமல்ல சாதாரண பெரும்பான்மையொன்றினால் இச்சட்டத்தினை நிறைவேற்ற முடியாது என தனது விதப்புரைகளை வழங்கியும் கூட, உச்ச நீதிமன்றத்தின் விதப்புரைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு அரசியலமைப்புக்கு முரணாக இச் சட்டமூலத்துக்கு தனது ஒப்புதலை வழங்கி இச் சட்டமூலத்தைச் சட்டமாக்கியுள்ளார்.

எமது சபாநாயகர் அவர்கள் நிகழ்நிலைக்காப்புச் சட்டத்தை அரசியலமைப்புக்கு முரணாக, உச்ச நீதிமன்றத்தின் விதப்புரைகளை புறக்கணித்து தனது ஒப்பத்தை இட்டதன் மூலம் அவர் கூறும் செய்தி என்ன? வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தை இதன் மூலம் எமது சபாநாயகர் அவமதித்துள்ளதுடன், அதனை முற்றாக மீறியுமுள்ளார். தென் கிழக்காசியாவில் பெருமைமிகு பாராளுமன்ற சம்பிரதாயம் கொண்ட நாட்டில், இதுவரையில் இருந்து வந்த சம்பிரதாயம் இதன் மூலம் முற்றாக மீறப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயக நாட்டில் சட்டத்துறை, நிருவாகத்துறை, நீதித்துறை சமமானதும் ஒன்றையொன்று ஒப்பாரும் மிக்காரும் இல்லாததாக இருக்க வேண்டுமென்ற வலுவேறாக்கல் தத்துவத்தை தன் காலில் போட்டு மிதித்துள்ளார். இது எமது பாராளுமன்றச் சம்பிரதாயத்துக்குப் பெருமையா, எமது சபாநாயகருக்கு இது பெருமையா,?

ஜனாதிபதியோ, பிரதமரோ எமது பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, சபாநாயகர் அவர்களை நோக்கி கௌரவ சபாநாயகர் அவர்களே என்றே விழிப்பார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என்ற பேதமின்றி சபையினை நடுநிலைமைத்தன்மையுடனும் நீதி நெறி முறையுடனும் சபாநாயகர் சபையினை வழிநடத்த வேண்டிய கடப்பாட்டுக்குரியவர். இத்தகைய சபாநாயகர் பதவியினை சீராக வகித்தவர்கள் எமது நாட்டிலும் இருந்துள்ளார்கள். ஆனால், இது போன்ற சம்பவம். இது போன்று எந்தச் சபாநாயகருக்கும் எமது நாட்டில் நடக்கவில்லை.

எமது பாராளுமன்றத்தின் செங்கோல் எமது சபாநாயகரின் பொறுப்பிலேயே உள்ளது. செங்கோல் என்பது பக்கச்சார்பற்ற நடுநிலை வகிக்கின்ற பதவிக்குரிய சின்னமாகும். ஆனால், எமது பாராளுமன்ற வரலாற்றில் அண்மைக்காலமாக சபாநாயகர் இத்தகைய நடுநிலைமைத் தன்மை வகிக்கின்றமையை நான் காணவில்லை. சபை விவாதங்களின் போது உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளிக்காட்டும் போதும் ஆளும் கட்சியினை ஒரு விதமாகவும் எதிர்க்கட்சியினரை வேறுவிதமாகவுமே நடத்திச் செல்கின்ற நிலைமையினை நாம் காணமுடிகின்றது. பாராளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமைகள் மீறப்படுகின்ற போதெல்லாம்  குறிப்பாக சிறுபான்மைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களது பாராளுமன்றச் சிறப்புரிமைகள் மீறப்படும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினர்களது சிறப்புரிமை மீறப்படும் போதெல்லாம் அவற்றை நாம் பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கும் போதெல்லாம் அவை முறையான கவனத்துக்கு உட்படுவதில்லை. அவர்களுக்குரிய முறையான நீதி கிடைப்பதில்லை என்பதனை இந்தச் சந்தர்ப்பத்தில் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

ஆளும் கட்சியினரின் அடாவடிகளை அக்கிரமங்களை, எதிர்க்கட்சியினர் எடுத்துரைக்கும் போது சிறுபான்மையினப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது உரிமைக் கோரிக்கைகளை எடுத்துரைக்கும்; போதும் அவற்றைச் சில்லறையாக நினைக்காது அவர்களது கோரிக்கைகளைச் செவிமடுத்து ஆளும் தரப்பின் அடாவடித்தனத்தைக் கண்டித்து அவர்களுக்குரிய நியாயத்தை வழங்கும் தற்துணிவும் திறமையும்; கொண்ட பதவி சபாநாயகர் பதவியாகும். இந்தப் பாராளுமன்றத்தின் உள்ளே ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் புத்திஜீவிதம் கொண்ட, வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயங்களை அறிந்த உறுப்பினர்கள் உள்ளார்கள் எனில் உங்கள் இதயத்தில் கைவைத்து எமது சபாநயகர் அவ்வாறு நடந்துள்ளாரா என்று நீங்களே அந்தக் கேள்விக்கு விடை காணுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக எமது ஜனாதிபதி அவர்கள் வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தை முழுதாக அறிந்தவர் என்பதை நான் அறிவேன். எமது சபாநாயகர் அவர்களது இந்த நடவடிக்கை குறித்து ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடு என்ன,?

இதனோடு தொடர்புடையதாக ஓரிரு விடயங்களைக் கூறலாம் என நினைக்கின்றேன். அண்மையில் எமது ஜனாதிபதி அவர்கள், பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தச் சட்ட அமுலாக்கம் பற்றி எடுத்துரைக்கின்றார். காலத்துக்குக் காலம் எமது ஜனாதிபதி அவர்கள் 13 தொடர்பாக, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஏதேதோ கூறுவதும் பின்னர் அவற்றை மறந்துவிடுவதும் 2015ஆம் ஆண்டு நல்லாட்சிக்காலத்திலிருந்து நாம் கண்ட அனுபவமாகும். சட்ட அனுபவம் நன்கு கொண்ட எமது ஜனாதிபதி அவர்களே பொலிஸ் அதிகாரம் தொடர்பாக ஏன் பயப்படுகிறார் என என்னால் அனுமானிக்க முடியவில்லை. வட கிழக்கு மாகாணங்களில் நீதித்துறையின் உத்தரவு பொலிசாரால் மீறப்பட்டுள்ள எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.

இதனைவிட முக்கியமான கருத்தொன்றை எமது வெளிநாட்டமைச்சர் அண்மையில் எடுத்துரைத்துள்ளார். தமிழர்கள் சமஸ்டி கோருவதற்கு உரித்துடையவர்கள் மட்டுமல்ல சமஸ்டியானது பிரிவினைக்கு அத்திவாரமாக இருக்காது அது ஒற்றுமைக்கான அத்திவாரமே எனவும் இது தொடர்பாக பல வெளிநாடுகளின் சமஸ்டி அரசியலமைப்பின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார். இது அமைச்சரது தனிப்பட்ட கருத்தா அல்லது அமைச்சரவையின் கருத்தா என்பது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் ஒரு சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றைக் கூறியதையிட்டு நான் அவரை வரவேற்கின்றேன், பாராட்டுகின்றேன். அவ்வாறு கூறுவதுடன் அவரது கடமையினை நிறுத்திவிடாது அதனைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு அமைச்சர் அவர்கள் முறையாகச் செயற்பட்டால் இந்த நாட்டை இனமத பேதமற்ற ஒரு நாடாக முன்னெற்ற முடியும் என மீண்டும் ஒரு முறை அவரைப் பாராட்டுகின்றேன். இவரைப் போலவேதான் முன்னாள் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரின் ஆட்சிகாலத்தில் பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்கினார். ஆனால் இன்று அது தொடர்பாக அவர் வாய் திறப்பது கூட இல்லை. முரணான கருத்துக்களையே கூறிவருகின்றார்.

எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட இன்றைய விவாதம் அரசாங்கக் கட்சியினரால் தோற்கடிக்கப்படலாம். ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று தோற்கடிக்கப்பட்டது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல, மாறாக பாரம்பரிய பெருமைமிக்க எமது பாராளுமன்ற சம்பிரதாயத்தினையும் வெஸ்ட் மினிஸ்ரர் சம்பிரதாயத்தில் பெருமை மிகு பதவியாக கருதப்பட்ட ஒரு சபாநாயகர் பதவியினையும் நாம் சீரழித்துள்ளோம் என்பதுவே உண்மையாகும் என்பதனை மறந்துவிடாதீர்கள்.