பனங்காட்டுக்குள் தீ திடீரென பரவியதால் வீடு ஒன்று முற்றாக எரிந்து சாம்பலாகியது.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் பொலிஸ் நிலையப் பகுதியில் காடு திடீரென தீப்பற்றி எரிந்தமையால் பரந்தளவு பனங்காடு சேதமடைந்ததுடன் ஒரு வீடும் முற்றாக தீயிற்கு இரையாகியுள்ளது.

இச் சம்பவம் மன்னார் நகர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பட்டித்தோட்டம் பகுதியில் திங்கள் கிழமை (18) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது
சம்பவம் அன்று (18) மாலை மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் பனங்காடு ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்ததும் சம்பவ இடத்துக்குக்கு விரைந்த பொது மக்கள் , அருகிலிருந்த கடற்படையினர் மற்றும் மன்னார் நகர் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன் , மன்னார் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தீபன் , மன்னார் நகர சபை செயலாளர் ஆகியோர் தீ காட்டுக்குள்ளும் கிராமப் பகுதிக்குள்ளும் பரவாதிருக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர்.

மன்னார் நகர சபையின் தீயணைக்கும் படையினர் குறிப்பிட்ட நேரத்துக்குள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து செயற்பட்டமையால் தீ பெரும் சேதத்தை உருவாக்காதிருப்பதற்கான நடவடிக்கையில் செயல்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும் காட்டுப் பகுதிக்கு அருகாமையில் இருந்த ஒரு ஓலை வீடு முற்றாக எரிந்து பல இலட்சம் ரூபா சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக்காட்டுத் தீ எவ்வாறு உருவாகியது என்பது இன்னும் கண்டுப் பிடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.