ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. இரா.சாணக்கியன்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாம் என்றும் எம் மக்களுக்காக, உட்கட்சி மோதல்கள் எமது மக்களுக்கான குறிக்கோள்கள் கொள்கைகளை சிதைப்பதில்லை. நாம் இன்னும் வலுப்பெற்றுள்ளோம். ஓர் குடும்பத்தில் மனஸ்தாபங்கள் சிறு சிறு சண்டைகள் வருவது இயல்பு ஆனால் அவை தீரும் போது வரும் ஒற்றுமை மற்றும் நம்பிக்கை உறுதி தற்போது எமக்கும் ஏற்ப்பட்டுள்ளது.தமிழரசுக் கட்சியினர் என்றும் ஒற்றுமையாக செயற்பட்டு தந்தை செல்வாவின் வழியில் எமது மக்களுக்கான பயணத்தை தொடர்வார்கள்  என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்டக்கிளைத்தலைவர்  பா.உ இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் ,பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தி.சரவணபவான் உட்பட கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  பலர் கலந்துகொண்டனர். இதன்போது தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் குறித்து பல்வேறுவாதப்பிரதிவாதங்கள் நடைபெற்ற நிலையில் கட்சியினை ஒற்றுமையுடன் முன்கொண்டுசெல்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்வின் பின்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது. தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை கடந்த காலங்களில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து ஓரணியில் செயற்பட தீர்மானித்தத்துடன், தேசிய ரீதியில் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்துள்ள செயலாளர் தெரிவு உள்ளிட்ட சில உட்கட்சி பிரச்சினைகளை தமிழரசுக் கட்சியின் பொதுச் சபை கூட்டங்கள் நடைபெறும் போது அங்கு பேசி தீர்மானிக்கவும் மாவட்ட கிளை என்ற அடிப்படையில் அனைத்து தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையுடன் செயல்படுவோம். எதிர்வரும் காலங்களில் நடைபெற உள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் பிறந்தநாள் நிகழ்வுகள் மற்றும் நடைபெற உள்ள இதர நிகழ்வுகளில் அடிப்படையில் புது உத்வேகத்துடன் செயற்பட உள்ளோம், தமிழர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சிக்கான ஆதரவை வழங்கி வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவதனை உறுதிப்படுத்துவோம் எனவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.