வெடுக்குநாறி வன்முறைக்கு மட்டக்களப்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

உரிமைகள் மறுக்கப்படும் போது ஊமைகளாய் இருக்க முடியாது’ எனும் தொனிப்பொருளில் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில், சிவராத்திரி நாளில் மதவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கும், அராஜக வெறியாட்டத்திற்கும் எதிரான அகிம்சைப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் ( ஜனா), முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் பா.அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களான மா.உதயகுமார் ,மா.நடராஜா,முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவான் அத்துடன் தர்மலிங்கம் சுரேஸ் , இரா.துரைரெட்ணம்  ,பெண்கள் அமைப்புக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இன்றைய தினம் காலை மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து மட்டக்களப்பு மணிக்கூண்டுக் கோபுர சுற்றுவட்டம்ஊடாக ஊர்வலத்தில் ஈடுபட்டு பசார் வீதி ஊடாகச் சென்று காந்திப் பூங்காவை வந்தடைந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கள் தேசத்தில் எங்கள் புராதன ஆலயத்தில், எங்கள் மக்களுக்கான மத கலாசார உரிமை காவல் துறையினரால் மறுக்கப்பட்டுள்ளது.
அடாவடித்தனமாக மதத் தலைவர்கள், பூசகர்கள், பாராளுமன்ற உறுப்பினர், பெண்கள் உட்பட பக்தர்கள் அவமரியாதைப்படுத்தி பலாத்காரமாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச் செயற்பாடானது வன்மையான கண்டனத்துக்குரியது என்பதுடன், சர்வதேசம் இவ்வாறான செயற்பாடுகளுக்கெதிராக இலங்கை மீத நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், தமிழ் மக்களது வழிபாட்டு, மத, பண்பாட்டுச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.