நானுஓயாவில் நேருக்கு நேர் மோதிய லொறி – மோட்டார் சைக்கிள் இருவர் வைத்தியசாலையில்

செ.திவாகரன்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று  வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த  நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த விபத்தில் காயங்களுக்கு உள்ளாகியவர்கள் 27 மற்றும் 28 வயதுடையவர்கள் எனவும் , தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள வாகன பழுது நீக்கும் கடையில் லொறியின் சில்லுக்கு காற்று நிரப்பிக்கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.