ஜனாதிபதியின் உரைக்கு பதில் உரையாற்றி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவிப்பு.
ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் புத்தரின் உன்னத வார்த்தைகளை பிரயோகித்து அவரது தொலைநோக்கு பயணத்தை நனவாக்க பெரும் முயற்சியை மேற்கொண்டார். தொங்கு பாலம் குறித்து பேசிய ஜனாதிபதி வங்குரோத்து நிலையை ஏற்படுத்தியவர்களை பாதுகாத்து வருகிறார். நாட்டில் வங்குரோத்து நிலையை ஏற்படுத்திய பேரழிவை உருவாக்கியவர்களிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நட்டஈடு பெறுவதற்கான வசதிகளைக்கூட தற்போதைய ஜனாதிபதியே நிறுத்தியுள்ளார். பேரழிவை உருவாக்கிய தலைவர்கள் திருடி சொத்துக்களையும் இந்த ஜனாதிபதியே பாதுகாத்து வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி இன்று (6) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதில் உரை நிகழ்ந்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் சொத்து வளம், பணம், அன்னியச் செலாவணி என அனைத்தையும் இழந்து மீண்டும் நம் நாட்டிற்கு அவை கிடைக்கப்பெறாதுள்ள நிலையில்,
வங்குரோத்தினை உருவாக்கியவர்களின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் 134 பேரினது வாக்குகளைப் பெற்று ஜனாதிபதிப் பதவியில் அமர்ந்திரும் தற்போதைய ஜனாதிபதி இந்த திருடர்களை நம்பியே ஆட்சியை நடத்தி வருகிறார்.
நாட்டை அழித்த ராஜபக்சர்கள் தலைமையிலான திருடர்கள் கூட்டமே தொங்கு பாலத்தில் இருந்து கரை சேர்ந்துள்ளனர்.ராஜபக்சர்கள் உருவாக்கிய வங்குரோத்தை ரணில் ராஜபக்ச அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தி மக்களின் வாழ்வை தொடர்ந்தும் சீரழித்து வருகிறது.
இதனால் 220 இலட்சம் மக்களே நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
மக்கள் ஆணை மூலம் பெற முடியாததை, திருடர்களுடன் கூட்டுச் சேர்ந்து பெற்றுள்ளார்.
மக்கள் ஆணை மூலம் ஒரு போதும் பெற முடியாத பதவியை, நாட்டை அழித்த தரப்பினரின் துணையுடன் ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். இவ்வாறு ஆட்சிக்கு வந்து மக்களின் வாக்குரிமையை அழித்து, நீதித்துறையின் சுதந்திரத்தை அழித்து, உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கிறோம் என்ற போர்வையில் நாட்டின் உழைக்கும் மக்களின் பணத்தை பிட்பொகட் அடித்து பெரும் பணக்காரர்களைப் பாதுகாத்து வருகிறார். வெட் வரி அதிகரிக்கப்பட்டு முழு நாடுமே நாசமடைந்துள்ள வேளையில் இந்த ஜனாதிபதி மாதத்திற்கு பல தடவைகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
நாங்கள் திருடங்களை பாதுகாக்கப்போவதில்லை. இதனால்தான் நாம் திருடர்களுடன் இணைந்து ஆட்சிப்பொறுப்பை ஏற்கவில்லை.
தரம் குறைந்த மருந்து,போலி மருந்து போன்ற மோசடிகளில் ஈடுபட்ட தேசிய நாசகாரங்களை உருவாக்கிய சுகாதார அமைச்சரை ஜனாதிபதியே பாதுகாத்தார். இதுபோன்ற திருடர்கள், மோசடியாளர்கள், கொள்ளையர்கள், ஊழல்வாதிகளை பாதுகாக்க முடியாத காரணத்தால் தான் நாம் இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசியலமைப்பு பேரவையை கூட நிறைவேற்று அதிகாரத்தின் கைப்பாவையாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதற்கு சபாநாயகர் கூட ஒத்துழைப்பு வழங்கி வருகிறார் என அவர் மேலும் தெரிவித்தார்.