தங்கள் காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் மூலம் விண்ணப்பம்.

( வாஸ் கூஞ்ஞ)  வடக்கு மாகாணத்தில் தாங்கள் பரம்பரையாக வாழ்ந்த காணிகளை இழந்த நிலையில் இன்னும் மீளப் பொறாது இருந்து வருவதாகத் தெரிவித்து மக்கள் ஜனாதிபதிக்கு தபால் அட்டைகள் மூலம் தெரிவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்து சென்றுள்ளபோதும் தங்கள் காணிகள் தமக்கு இன்னும் மீளத் தரவில்லையென தெரிவித்தும் அவற்றை மீளத் தங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என வடபகுதி மக்கள் ஜனாதிபதிக்கு நேரடியாக  தபால் அட்டையின் மூலம் தபாலில் அனுப்பும் நடவடிக்கை முன்னெடுக்க்பட்டு வருகின்றது.

வட பகுதியில் நிகழவுருக்கும் இச்செயற்பாட்டின் முதற் நிகழ்வாக இது மன்னாரில் திங்கள் கிழமை (04) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மெசிடோ என அழைக்கப்படும் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் அனுசரைனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள மக்கள் மற்றும் இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் காணி விடுவிக்கப்படாத காரணிகளை தெளிவுப்படுத்தி அவற்றை விடுவிக்க வேண்டும் என தெரிவித்து வடக்கிலிருந்து சுமார் பத்தாயிரம் போஸ்காட்கள் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான ஆரம்ப நிகழ்வாக இது அமைந்திருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இன்றையத் தினம் நூற்றுக்கு மேற்பட்டோர் ஒரு தனியார் கட்டிடத்தில் நடைபெற்ற கருத்தமர்வில் கலந்து கொண்ட பின் விடுவிக்கப்படாத தங்கள் காணிகள் தொடர்பாக தபால் அட்டையில் குறிப்பிட்டு ஜனாதிபதியின் விலாசம் இடப்பட்டு மன்னார் தபாலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று தங்கள் தபால் அட்டைகளை தபால் பெட்டிக்குள் இட்டச் செயல்பாடும் இடம்பெற்றது.