மறைந்த சாந்தனுக்கு திருகோணமலையிலும்இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பில் மலர் அஞ்சலி

ரவ்பீக் பாயிஸ்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தன் எனும் தில்லையம்பலம் சுதந்திர ராஜா அவர்களின் பூத உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து நாட்டில் பெரும்பாலான பிரதேசங்களில் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் (03) திருகோணமலையில் மறைந்த சாந்தனுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளையின் பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் அவர்களின் தலைமையில் சாம்பல் தீவு அத்திமோட்டை பிரதேசத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மேலும் திருகோணமலையில் அமைந்துள்ள வெளிக்கடை தியாகிகள் நினைவு மண்டபத்திற்கு முன்னால் வழிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் மறைந்த சாதனுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பொருளாளர் வெள்ளத்தம்பி சுரேஷ் இவ்வாறு கருத்து தெரிவித்தார்
 33 வருடத்திற்கு மேலாக தன் தாயைப் பிரிந்து சிறையில் வாழ்ந்த மகனின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாடு திரும்ப இருந்த சாந்தன் சுகையீனமுற்ற நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் சாந்தனின் இந்த இறுதி ஆசையினை இந்திய அரசு மற்றும் இலங்கை அரசு நினைத்திருந்தால் தனது தாயினை சந்திப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருக்க முடியும் இருந்தும் சாந்தனுக்கு இந்த நிலை ஏற்பட்டமையானது பெரும் கவலைக்குரிய விடயமாகும் என தெரிவித்தார்
மேலும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சமூக ஆர்வலர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
சாந்தன் போன்று இலங்கை நாட்டில் அல்லாது அயல்நாடான இந்தியாவில் கூட பல அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் பல இன்னல்களை இன்று வரை சந்தித்த வண்ணம் உள்ளதாகவும் இன்று சாந்தனுக்கு ஏற்பட்ட நிலை ஏனைய அரசியல் கைதிகளுக்கு ஏற்படாத வகையில் இலங்கை அரசு உட்பட இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்வேளையில் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த மலர் அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் முருகதாஸ் கட்சியின் ஆதரவாளர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.