எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எமது நாட்டில் ஜனநாயகத்தின் 3 முக்கிய தூண்களான நிறைவேற்றுநர், சட்டமன்றம் மற்றும் நீதித்துறை என்பன இருந்தாலும், ஜனநாயகம் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் ஊழல்வாதிகளை பாதுகாப்பதாகவும் திருட்டு, இலஞ்சம் மற்றும் மோசடிகளை பாதுகாத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர், மருந்துப்பொருள் கொள்வனவு செயன்முறையில் நடந்த மோசடி உண்மை வெளிவந்ததையடுத்து, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்தது. இதன் போது சுகாதார அமைச்சரைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் 113 உறுப்பினர்கள் ஈடுபட்டனர், நாட்டை ஆளும் ஜனாதிபதி அவரைப் பாதுகாக்க செயற்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முக்கியத்துவம் தற்போது வெளிப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் இந்த திருடர்களை பிடித்து வழக்கு தொடர்ந்தாலும், இந்த மோசடி செயல்களுக்கு காரணமானவர்கள் தற்போது அம்பலமாகியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் பாராளுமன்றத்தில் இந்த திருடர்களைப் பாதுகாக்க பெரும்பான்மையானவர்கள் முன்வந்தனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 115 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, தெபரவெவ, ஜனாதிபதி கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்றைய (02) தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, பாடசாலை இசைவாத்தியக் குழுக்கான ஆடை மற்றும் பஸ் ஒன்றும் இப்பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும் என்பதோடு, இதுதவிர நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவுக்குத் தேவையான அணிகலன்களைப் பெற்றுக் கொள்ள ஒரு இலட்சம் ரூபா நன்கொடையும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
நாட்டிற்கு பயன் தராத திட்டங்களுக்கு பெரும் கடன் வாங்கி ஊழல், மோசடி, திருட்டு என பெரிய அளவில் இயங்கி வருவதால் நமது நாடு 90 பில்லியன் டொலர் கடனாளியாக மாறியுள்ளது. ஒரு குடும்பம் நாட்டின் வளங்களைத் திருடி, நாட்டின் வளங்களை அழித்து, அவர்கள் விரும்பியபடி பரிவர்த்தனைகளை நடத்தியதே அதிக VAT மற்றும் வருமான வரி செலுத்துவதற்குக் காரணம்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் நாட்டை அழித்த இவர்களை வெளிப்படைத்தன்மையுடன் நீதிமன்றில் முன்னிறுத்தி தண்டித்து அந்த வளங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்னும் வீட்டுப் பணியாளர்களை மட்டுமே நாம் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகிறோம்.
எமது நாட்டில் இன்றும் பெரும்பாலும் வீட்டு வேலையாட்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறைக்கு அனுப்பினாலும், இந்திய நாட்டவர்கள் அமெரிக்காவில் உள்ள சிலிக்கன் நகருக்கு சொப்ட்வேர் இன்ஜினியர்களாகச் செல்கிறார்கள். இந்தியாவில் தகவல் தொழிநுட்பப் புரட்சி பரவலாக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தகவல் தொழிநுட்ப பாடத்திட்டம் தயாரிக்கப்பட்ட போது இந்தியாவில் யாரும் புரட்சி செய்ய வீதியில் இறங்கவில்லை.
ஆனால் எமது நாட்டில் புதிய,சிறந்த, முக்கியமான மற்றும் நவீன விடயமொன்றை செய்ய முற்பட்டால் சில தரப்பினர் வீதியில் இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் யார் வீதிக்கு வந்தாலும் 10,126 அரச பாடசாலைகளில் பயிலும் 41 இலட்சம் மாணவர்களுக்கு பாரிய கல்வி சீர்திருத்தத்தை மேற்கொண்டு ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தை நாம் ஏற்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டில் டிஜிட்டல் புரட்சி ஏற்படும் என்று ஆட்சியாளர்கள் கூக்குரலிட்டாலும், நம் நாட்டில் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் பணி தரம் 6-13 வரையே நடைபெறுகிறது.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தரம் 1-13 வரை ஆங்கிலத்தில் கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.