ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்  தொடரப்பட்ட  வழக்கு  விளக்கத்துக்காக நியமிப்பு.

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் முல்லைத்தீவு காவல்துறையினரால் 20.04.2019 அன்று கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டு கடந்த பல வருடங்களாக வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், கடந்த 04.05.2023 அன்று  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றபோது  வழக்குடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வாளர் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகளுக்கு வருவதில்லை என தெரிவிக்கப்படட நிலையில்   குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணைகள் 2023-09-21 ம் திகதிக்கு தவணையிடப்பட்டிருந்தது

இந்நிலையில் 2023-09-21 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்  வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஊடகவியலாளர்  சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார் அன்றும் வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகைதரவில்லை இந்நிலையில் குறித்த கடற்படை புலனாய்வாளருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக பொலிசார் நீதிபதிக்கு தெரிவித்தனர் இந்நிலையில் குறித்த கடற்படை புலனாய்வாளர் மற்றும் அவரது சாட்சி  ஆகிய இருவருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கு 2024.02.29 ம் திகதிக்கு தவணையிடப்பட்டது

இந்நிலையில் 2024.02.29 நேற்று  குறித்த வழக்கானது  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஊடகவியலாளர்  சண்முகம் தவசீலன் சார்பாக சட்டத்தரணி வி எஸ் எஸ் தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தார் குறித்த கடற்படை புலனாய்வாளரும் வருகைதந்திருந்தார்.  ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு விளக்கத்துக்காக   மார்ச் 28 ம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது

.

இந்நிலையில், தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் அன்று மாலை முல்லைத்தீவு காவல்நிலையத்தில் உண்மைக்கு புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளார்