எமது பூர்வீக காணி கபளீகரம்   பொத்துவில் பிரதேச செயலகம் முற்றுகை.

( வி.ரி. சகாதேவராஜா)  பொத்துவில் பிரதேசத்தில் இருக்கின்ற எமது பூர்வீக காணிகளை எமது உயிர் போனாலும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.  மூவினத்துக்கும் பொதுவான பிரதேச செயலாளர் நீதியாக நடக்க வேண்டும்.
 இவ்வாறு பொத்துவில் பிரதேச செயலகம் முன் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் சிங்கள மக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
 இந்த முற்றுகையும் ஆர்ப்பாட்டமும் நேற்று முன்தினம் இடம் பெற்றது .
அங்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்திபன், பொத்துவில் உப விகாரதிபதி உத்தலமட்ட ரத்னபிரிய தேரர், இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி துணைச்செயலாளர் அருள். நிதாஞ்சன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுபோதரன் உள்ளிட்ட குழுவினர் அங்கு சமூகளித்திருந்தனர்.
 500க்கும் மேற்பட்ட தமிழ் சிங்கள மக்கள் அங்கு கூக்குரல் இட்டவண்ணம் குழுமியிருந்தனர்.
 பிரதேச செயலாளர் ஏ.எல்.பிர்னாஸ், உதவி பிரதேச செயலாளர்  பி.இராமக்குட்டி மற்றும் அதிகாரிகள் வாசல் அருகே நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களின் பிரதிநிதிகளை மாத்திரம் உள்ளே அழைத்து கலந்துரையாடினர்.
 அப்போது முன்னாள் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்திபன் கூறுகையில்..
 பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் இதுவரை செயயப்பட்டு வந்த சேனைப் பயிர்ச்செய்கை அனைத்தும் கைவிடப்படும் நிலையில் இருக்கின்றது.
கோமாரி பிரதேசத்தில் யுத்தத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளினுள் இருந்த காணி உரிமை பத்திரம் பர்மிட் அனைத்தும் எரிந்தன.
புதிய பத்திரம் வழங்குவதாக பிரதேச செயலாளர் அறிவித்தார். அதற்கமைவாக இருநூறு 300 பேர் விண்ணப்பித்தனர்.
 ஆனால் இதுவரை எவருக்குமே அந்த பத்திரம் கிடைக்கவில்லை.
கனகர் கிராமம் என்பது தமிழர்களின் பூர்வீக கிராமம். பல வருட போராட்டத்தின் பின்பு அண்மையில் 73 பேருக்கு மாத்திரம் காணி உரிமை பத்திரம் வழங்கப்பட்டது. ஆனால் அது கல் போட்டு அதனை எல்லைப் படுத்தவில்லை. இதனால் வீதி எங்குள்ளது?  காணி எங்குள்ளது என்பது தெரியாமல் மக்கள் அலைகின்றனர் .
கிணறு வெட்ட அனுமதி கேட்டால் அதனை மறுக்கிறார்கள் . தடுக்கிறார்கள்.அங்கு பொதுவாக குடில் அமைத்து அதில் கூட்டம் கூடினால்
தடுக்கிறார்கள் . எனவே அதை சீர் செய்து எஞ்சிய ஏனையவர்களுக்கும் அந்த காணியை வழங்க வேண்டும்.
 அடுத்து பிரதானமான பிரச்சனை 2015ல் மைதான காணிப்பிரச்சினை உருவானது .
இது காலகாலமாக எமது ஆலயங்களுக்கு எமது முன்னோரால் அந்த வட்டி வயல் எமக்கு அளிக்கப்பட்டது ஆனால் ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து எங்களுக்கு மைதானம் வேண்டும் என்று கோஷம் இடுகின்றனர். இதை சில அரசியல்வாதிகள் பின்புலத்தில் இருந்து தூண்டுகின்றனர் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்பிறந்த .தமிழ் முஸ்லீம் இளைஞர்களை தூண்டுவதற்கு இதனை பயன்படுத்துகின்றனர்.
ஏதோ ஒரு அரசியல் சக்தி உங்களையும் நீதியாக வேலை செய்யவிடாமல் தடுக்கிறது என்று எண்ணவேண்டி இருக்கின்றது.
 உங்களிடம் நீதி கேட்டு இருக்கின்றோம். உங்களிடம் காணியதிகாரம் இருக்கிறது. மூவினத்திற்கும் பொதுவான அதிகாரி நீங்கள். நீதியாக செயற்படவேண்டும். தாமதிக்காமல் எமக்கு நீதி வழங்கப் பட வேண்டும்.
 இழுத்து அடிக்கப்படுகின்ற நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். இல்லாவிட்டால் அடுத்த கட்ட செயற்பாட்டிலா நாங்கள் இறங்க வேண்டி வரும் என்றார்.
அங்கு பொத்துவில்  பிரதேச செயலாளர் பிர்னாஸ் பதிலளிக்கையில்..
 நாங்கள் யாரையும் கிணறு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அவர் அந்த உரிய முறைப்படி காணிஉரிமத்துடன் விண்ணப்பிக்கின்ற பொழுது அதனை பார்த்து நாங்கள் அதனை செய்வோம்.என்றார்.
 இடையில் குறிப்பிட்ட நிதான்சன்..  ஜனவரி 12ஆம் தேதி கந்தையா கோபால் மு.ஆறுமுகம் ஆகியோர் கிணறு கட்ட விண்ணப்பித்திருந்தனர் . ஆனால் இதுவரைக்கும் அந்த விண்ணப்பத்திற்கு பதில் அளிக்கவில்லை என்று சொன்னார்.
 மீண்டும் பிரதேச செயலாளர் கூறுகையில்..
 கனகர்கிராம பிரச்சனை காணி  ஆணையர் அனுமதி பெற்று வழங்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக தற்பொழுது மாகாண காணி ஆணையாளர் அனுமதி பெற்று அதனை வழங்குவோம். யாருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
 வட்டிவயல் காணி 17ஏக்கர் காணி .அதனை மைதானத்திற்கு தேவை என்று ஒரு சாரார் கேட்கின்றனர். நீங்கள் ஆலய காணி என்கிறீர்கள். இதிலே நாங்கள் மாவட்ட செயலாளருக்கு இது தொடர்பாக அறிவித்திருக்கின்றோம் .அவரது பதில் வந்ததும் அதன் படி செயற்படுவோம்.
யாருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. அடுத்து ஊரணி சரஸ்வதி வித்தியாலய காணி உரிய காலத்தில் வழங்கப்படும் என்றார்.
இறுதியில் மகஜர் சமர்ப்பித்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டம் கலைந்தது.