( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு இடையே நடைபெற்ற சினேகபூர்வமான கிரிக்கெட் சுற்று போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர் அணியினர் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்று 2024ம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை தம்வசம் ஆக்கினர்.
மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் (28) புதன்கிழமை மாலை நடைபெற்ற போட்டிக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. கலீஸ் தலைமை தாங்கியதுடன். முற்று முழுதான ஏற்பாடுகளையும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் எம்.பரமேஸ்வரனின் வழிகாட்டலில் மாவட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் செய்திருந்தனர்.
நான்கு அணிகள் பங்குகொண்ட இச்சுற்றுப் போட்டியில் தாம் சந்தித்த சகல போட்டிகளிலும் நீண்ட ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர் இறுதிப் போட்டியில் திருகோணமலை மாவட்ட விவசாய திணைக்கள அணியினருடன் பலப்பரீட்சை நடத்தினர். இதன்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தீர்மானித்த சுகிரதராஜ் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர் சிறப்பான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பின் வியூகங்கள் மூலம் 7 ஓவர்களுக்கு 46 ஓட்டங்களை மட்டுமே எதரணிக்கு வழங்கினர். 47 என்ற வெற்றி இலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்கள அணியினர் 9 விக்கட்டுக்களால் வெற்றிக் கிண்ணத்தை தமதாக்கினர்.
மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளரின் உயரிய வழிகாட்டலுடன் கூடிய பயிற்சியே சகல வீரர்களும் எந்த குறையும் இன்றி இந்த போட்டியில் பிரகாசிப்பதற்கு காரணமென அணியின் தலைவர் கூறினார்.