ஆழமான ஆபத்து : சீன நீர்மூழ்கி ஏவுகணைகள்!

உலக கடல் வல்லரசாக சீனா முயற்சி !

மீண்டும் பனிப்போர் அச்சங்கள் !!
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
சீனாவின் நீர்மூழ்கிகளின் நடவடிக்கை தீவிரமடைந்து வருவது, தென்னாசிய பிராந்தியத்தில் மிகப்பெரும் இராணுவ சவாலக மாறிவருகின்றது. சீனாவின் நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையும் திறனும் அதிகரித்து வருகிறது. அத்துடன் அணுவாயுத திறனை மாத்திரம் அதிகரிக்கவில்லை, தனது பிராந்தியங்கள் என சீனா கருதுபவற்றை பாதுகாக்க கூடிய அதன் திறனையும் அதிகரிக்கின்றது.
சீனா பூமர் எனும் நீர்முழ்கியை கடலுக்குள் அனுப்பியுள்ளது. இந்த நீர்மூழ்கி அணு ஏவுகணைகளை கொண்டிருக்கும் என அமெரிக்காவின் கடற்படை புலனாய்வு தெரிவித்துள்ளது.
மீண்டும் பனிப்போரா ?
பனிப்போர் காலத்தில் அமெரிக்க –சோவியத் நீர்மூழ்கிகள் மத்தியில் இடம்பெற்ற போட்டி போன்ற ஒன்றை ஆசியாவில் சீனாவின் நீர்மூழ்கிகள் ஆரம்பித்து வைக்கலாம் என்பது கடற்படை நிபுணர்களின் கணிப்பாக உள்ளது. அக்காலப்பகுதியில் இரு நாடுகளும் தமது நீர்மூழ்கிகளை ஏனைய நாட்டை நோக்கி தாக்குவதற்க்கு ஏதுவாக கடலுக்கு அடியில் அனுப்புவது வழமையாக காணப்பட்டது. அதேபோன்று  ஏனைய நாடுகளின் நீர்மூழ்கிகளை இனம்கண்டு அழிப்பதற்காக நீர் மூழ்கிகளையும் அனுப்பின.
சோவியத்தின் வீழ்ச்சி அந்த போட்டியை முடிவிற்க்கு கொண்டுவந்தது. ஆனால் இன்று சீனா தனது கடலுக்கடியிலான பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளதையடுத்து, அமெரிக்காவின் ஆசிய சகாக்கள் அதனை எதிர்கொள்ள தமது நீர்மூழ்கிகளின் பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளன.
சீனாவோ அல்லது அமெரிக்காவோ பனிப்போர் காலம் திரும்புவதை விரும்பவில்லை. அவர்களது பொருளதாரங்கள் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளன. சந்தையை மையமாக வைத்து சிந்திக்கும் இன்றைய சீனா சர்வதேச புரட்சி குறித்த சிறிதளவும் சிந்திக்கவில்லை. தங்களது நீர்மூழ்கிகள் ஏயைநாடுகளை அச்சுறுத்தவில்லை என தெரிவிக்கும் சீன அதிகாரிகள் தங்களுடைய  பிரதேசத்தை பாதுகாப்பதற்க்கும், சர்வதேச நலன்களை விஸ்தரிப்பதற்க்குமே அவை என்கின்றனர்.
இந்து சமுத்திரத்தில் சீன நீர்மூழ்கி:
இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக்கில் தமது நீர்மூழ்கிகள் சர்வதேச சட்டங்களை பின்பற்றுகின்றன என தெரிவிக்கும சீனாவின் பாதுகாப்பு அதிகாரிகள்,சகல தரப்புகளுடனும் சிறந்த தொடர்பாடல்களை பேணுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
சீனா தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றாமல் தனது சர்வதேச கடமைகளை நிறைவேற்ற நீர்மூழ்கிகள் உதவுகின்றன என்கிறார் சீன நாட்டின் பாதுகாப்பு பேச்சாளர்.
எனினும் ஆசியாவில் தனது இராஜதந்திர மற்றும் இராணு வவளங்களை குவிக்கும் தனது தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா தனது நீர்மூழ்கிகளை முன்னணிக்கு நகர்த்தியுள்ளது.
அமெரிக்காவின் கடலுக்கடியிலான பலத்தின் 60 வீதம் பசுபிக்கிலேயே காணப்படுகின்றது. அமெரிக்கா தனது தாக்குதல் நீர்மூழ்கியை குவாமில் நிறுத்தியுள்ளது.
ஜப்பானில் ஒகினாவாவில் அமெரிக்கா ஆறு நீர்மூழ்கிகளை நிறுத்தியுள்ளது. அத்துடன் ரஷ்யாவின் நீர்மூழ்கிகளை கண்டறிவதற்கான திறனை அதிகரித்துள்ள அமெரிக்கா, சீனாவின் நீர்மூழ்கிகளை கண்டுபிடிப்பதற்காக கடலுக்கடியில் இயங்கும் ஆளில்லா கலங்கள் போன்ற தொழிநுட்பங்களை பரிசோதனை செய்துவருகின்றது.
வேறு பல ஆசிய நாடுகளும் தமது நீர்மூழ்கி பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.  பனிப்போர் காலத்தை விட தற்போது அப்பகுதியில் அதிகளவு நீர்மூழ்கிகள் காணப்படுகின்றது.
இவற்றின் பாதுகாப்பே மிகப்பெரும் பிரச்சனையாகும். ஒரே கடற்பரப்பில் பல நீர்மூழ்கிகளை விடும்போது அவை மோதிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
சீனாவிடம் மிக வலுவான தாக்குதல் நீர்மூழ்கி:
சீனாவிடம் தற்போது மிக வலுவான தாக்குதல் நீர்மூழ்கி தொகுதியொன்று காணப்படுகின்றது. அவற்றில் 5 அணுவாயுத மாதிரிகள், பூமர்களும் காணப்படுகின்றன. சீனா நீர்மூழ்கிகளின் வரலாறு நீர்மூழ்கிகளை உருவாக்குவதற்கான சீனாவின் ஆர்வம் 1960 களிலேயே ஆரம்பமாகிவிட்டது 1000 வருடங்கள் ஆனாலும் அணுவாயுத நீர்மூழ்கியொன்றை உருவாக்குவோம் என்றார் மா வோ-சேதுங்.
1950 களிலிருந்து சீனா டீசல் நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் அவை நீரிற்கு மேலாக அடிக்கடி வரவேண்டிய தேவை காணப்பட்டதால் அவற்றை இனம் காண்பது சுலபமாக காணப்பட்டது. அணுசக்தி நீர்மூழ்கிகள் வேகமானவை நீண்ட காலம் கடலுக்குள் இருக்க கூடியவை.
1970 ஆம்ஆண்டு மாவோவின் பிறந்த நாளின் போது சீனாதனது முதலாவது அணுசக்தி நீர்மூழ்கியை வெள்ளோட்டம் விட்டது.1988 இல் தனது கடலுக்கடியிலான ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது.
உலக கடல்வல்லரசாக  சீனா:
தென் ஜப்பானிலிருந்து பிலிப்பைன்ஸ் வரையும், வட ஜப்பானிலிருந்து இந்தோனேசியா வரையும் உள்ள அமெரிக்க படைகளால் சீனா நெருக்கடியை எதிர்கொள்வதாக சீனா கருதுகிறது. சீனா தனது கடல் ஆதிக்கத்தை 2050 ற்க்குள் உலக கடல்வல்லரசாக வேண்டும் என முனைகிறது.
எனினும் இதுவரை சீனாவின் நீர்மூழ்கிகளின் திறன் அமெரிக்காவை நெருங்க முடியாதவையாக உள்ளன. அமெரிக்காவிடம் 14 பூமர்களும்,55 அணு தாக்குதல் நீர்மூழ்கிகளும் உள்ளன. எனினும் அமெரிக்காவின் கவலை இந்த நிலையை எவ்வாறு தொடர்ந்து காப்பாற்றுவது என்பதுதான்.
நிதி நெருக்கடி காரணமாக 2028 இல் அது தனது நீர்மூழ்கிகளின் எண்ணிக்கையை குறைக்க எண்ணியுள்ளது. பனிப்போர் சோவியத்தின் பொருளாதாரத்தை வீழ்த்திய விதத்தை நன்கு அறிந்துள்ள சீனா அமெரிக்காவிற்க்கு சமமாக மாறுவதற்க்கு நினைக்கவில்லை.
ஹவாய் -அலாஸ்காவை தாக்கும் வல்லமை:
சீனாவின் இந்த பூமர்களில் காணப்படும் ஏவுகணைகள் கிழக்கு ஆசியாவிலிருந்து ஹவாய் மற்றும் அலாஸ்காவை தாக்க கூடியவை. பசுபிக்கின் நடுப்பகுதியிலிருந்து அமெரிக்காவின் சில பகுதிகளை இலக்குவைக்க கூடியவை என்பதை அமெரிக்க அதிகாரிகளே ஏற்றுக் கொள்கின்றனர்.
ஏனைய நாடுகளின் கடற்படைத் தளபதிகளுக்கு இந்து சமுத்திரப் பகுதியில் தடையற்ற பயணத்தை சீனா நீர்மூழ்கி மேற்கொண்டது என்பது மிக முக்கியமான விடயம். ஹவாயிலுள்ள அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படை பிரிவு வரை தன்னால் சென்றுவர முடியும் என சீனா நிரூபித்துள்ளது. இது அமெரிக்காவை அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது.
கடந்த வருடங்களில் உலக நாடுகளின் கவனம் சீனாவின் அதிகரித்து வரும் இராணுவத் தளபாடங்கள் குறித்து திரும்பியுள்ளது. விமானங்தாங்கி கப்பல்கள், அதிநவீன தாக்குதல் விமானங்கள், என அது தன்னை பலப்படுத்தியுள்ளது.
நீர்மூழ்கிகள் ஏன் முக்கியம் ?
சீனாவிற்கு நீர்மூழ்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதமாகும். ஒரு நீர்மூழ்கியே சீனாவின் வல்லமையை பறைசாற்றவும், தன்னுடைய வெறும் பிரசன்னம் மூலமாக ஏனைய நாடுகளை தடுத்து நிறுத்தவும் போதுமானது.
தாய்வான், அல்லது ஜப்பான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடனான மோதலில் அமெரிக்கா தலையிடுவதை தடுப்பதற்கான தந்திரோபாயத்தின் ஒரு பகுதியே இந்த நீர்மூழ்கிகள் என அமெரிக்கா கருதுகின்றது.
அமெரிக்காவின் சகாக்களான ஜப்பானும்,பிலிப்பைன்சும் சீனாவுடன் நிலப்பகுதிக்கான தகராறில் இன்னமும் சிக்கியுள்ளன.
அமெரிக்கா தலையீடை தடுக்கும் தந்திரோபாயம் :
சீனாவின் பூமர் நீர்மூழ்கிகளே , அமெரிக்காவை கடலிலிருந்து மேற்கொள்ளப்பட கூடிய ஏவுகணை தாக்குதல் குறித்து சிந்திக்க தூண்டியுள்ளது. அதனை எதிர்கொள்வது குறித்து அமெரிக்கா திட்டமிட்டுவருகின்றது.
அமெரிக்காவின் நீர்மூழ்கிகளையும், சர்வதேச அளவில் பயணம் செய்ய கூடிய அதன் திறமையையும், உலகின் பல பகுதிகளில் அமெரிக்காவால் செல்வாக்கு செலுத்தக்கூடியதாக உள்ளதையும் சீனா பல வருடங்களா அவதானித்திருக்க வேண்டும்.
சீனாவின் நீர்மூழ்கிகள் உலகில் கடல் ஆகாயம் மற்றும் தரையிலிருந்து அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய மூன்று நாடுகளில் ஒன்றாக சீனாவை மாற்றியுள்ளது.
அமெரிக்காவும், ரஷ்யாவும் மற்றயை நாடுகளாகும்.
சீனா நீர்மூழ்கி ஏவுகணை -ஆழமான ஆபத்து:
ஆழமான கடற் பகுதியூடாக பயணம் செய்யக்கூடிய அணுவாயுத நீர்மூழ்கியை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இணைய வேண்டுமென்ற சீனாவின் நீண்ட நாள் கனவு சாத்தியமாகி விட்டது.