ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவில் அழிக்கப்பட்டன
நோய் தொற்றை உண்டாக்க கூடிய உணவை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத பெருமளவிலான உணவுப் பொருட்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணனின் வழிகாட்டலில், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பரமானந்தராசா தலைமையில், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் திருனவன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான அமுதமாலன், தீபகுமாரன், கிஷான், சிவகாந்தன், ரவிதர்மா மற்றும் பொது சுகாதார பரிசோதக மாணவர்கள் இணைந்து நேற்று (22.02.2024) வியாழக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட சிற்றூண்டிச்சாலைகளில் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இச் சோதனைகளின் போது மனித பாவனைக்கு உதவாத, நோய் தொற்றை உண்டாக்கக் கூடிய வகையில் களஞ்சியப்படுத்தியிருந்த பெருமளவிலான உணவுப் பொருட்கள் சுகாதார பிரிவினரால் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.
அத்துடன் 04 பேருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், அவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
மேலும் இச் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்ட ஏனைய உணவகங்களுக்கு எதிராகவும் எதிர்வரும் 26.02.2024 ஆம் திகதியன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.