கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனத்தினால்  மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல் நிகழ்வு இன்று (21) திகதி நடைபெற்றது.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.இதன் போது கிராமிய அபிவிருத்தி  திட்டமிடல் அமைப்பு நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2021 ம் ஆண்டில் இருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும், எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி திட்டமிடல்  நிறுவனத்தினால் பாலூட்டும் தாய்மார்களுக்கான போசாக்கான சத்துமா வழங்குதல், போசனை குறைந்த சிறார்களுக்கு உணவு விநியோகம், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட  மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்தல், மாதிரி வீட்டுத்தோட்டத்தை அமைத்தல், கால்நடைகள் வழங்குதல், மாவட்டத்தில் நிலக்கடலை செய்கையை ஊக்குவித்து, அதற்கான தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கி வருகின்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக இந்நிறுவனமானது தமது நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ரீ. நிர்மலன், பிரதேச செயலாளர்கள், வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள்  கிராமிய அபிவிருத்தி திட்டமிடல்  நிறுவனத்தின் முக்கிய பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.