அன்று நீதிமன்றமாக விளங்கிய ஆலயங்கள் இன்று நீதிமன்றத்தில்! 

( காரைதீவு  சகா)  அன்றையகாலகட்டத்தில் ஆலயங்கள் சமூகத்தை வழிநடத்தும் நீதிமன்றமாகவும் விளங்கியது. ஆனால் இன்று நிர்வாக சிக்கலில் மாட்டி பல ஆலயங்களில் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.
இவ்வாறு மடத்தடி மீனாட்சி அம்மனாலய விசேட நிர்வாக சபை கூட்டத்தில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்  வேதநாயகம் ஜெகதீசன் கவலை தெரிவித்தார் .
நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயவிசேட நிருவாக சபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் கே.ஜெயசிறில் தலைமையில் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது .
அங்கு அரசஅதிபர் மேலும் கூறுகையில்.
அம்பாறை மாவட்டத்தில் இன்று 21 ஆலயங்கள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. பணம் நேரம் என்பன வீணாக விரயமாகின்றன. உகந்தமலை முருகன் ஆலயமும் நீதிமன்றில் உள்ளதை அறிவீர்கள். அதனால் லாகுகலை பிரதேச செயலாளர் வசம் அவ் ஆலயம் பரிபாலிக்கப்படுகிறது.
விசேட அமைவிடம் பொருந்திய இவ் ஆலயம் மிகவும் பலத்த சவால்களுக்கு மத்தியில்  கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது. அதற்காக இந்த ஆலய நிர்வாக சபையை பாராட்டுகின்றேன். அதேவேளை இங்குள்ள நிர்வாக நடவடிக்கைகள் சீரமைக்கப்பட வேண்டும் .அந்த ரீதியிலே இந்த கூட்டம் இடம்பெறுகின்றது. என்றார்.
கூட்டத்தில்
ஆலய பரிபாலன சபையின் ஆலோசனைகளான வி.ரி.சகாதேவராஜா வா.குணாளன் வி.ஜயந்தன்  மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
 மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி நிந்தவூர் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் விசேட கூட்டம் இடம்பெற்றது.
எதிர்வரும் 16ஆம் தேதி சங்காபிஷேகம் இடம்பெற இருக்கின்றது. அவ்வளையில் ஆலய வரலாற்று நூலான ” “மரகதம் “என்ற நூல் வெளியிட்டு வைக்கப்படவிருக்கிறது என தலைவர் கூறினார்.