ஆதிக்க நீக்கம்பெற்ற அறிவுருவாக்கம் நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிப்போம்

ஆதிக்க நீக்கம்பெற்ற அறிவுருவாக்கம் நோக்கி தன்னம்பிக்கையுடன் பயணிப்போம்

ஈழத்து ஆளுமைகளது அறிவுருவாக்கத் தடம்பதிப்பிற்கு மிகநீண்ட வரலாறு உண்டு. தமிழ்கூறும் நல்லுலகிற்குள்ளும்; அது கடந்து உலகப் பெரும் பரப்பிலும் இதன் விகசிப்பைக் காணமுடியும்.

சமகாலத்திலும் இந்த அறிவுருவாக்க மரபுத் தொடர்ச்சியின் முன்னெடுப்பில் மிளிரும் ஆளுமைகளையும் அடையாளம் காணவும் காட்டவும் முடியும்.

இந்நிலையில் ஈழத்து அறிவுருவாக்கப் பரப்பில் மேற்படி விடயம் தொடர்பான மதிப்பீட்டின் அவசியம் உணரப்படுகின்றது. மெய்யான அறிவுருவாக்க மரபை ஈழத்தில் வலுப்படுத்தும் நோக்கில் தன்னம்பிக்கையுடன் செயற்படுவதற்கு இது தேவையானதாகிறது.

பன்மைத்துவத்தைக் கொண்டாடும் உலகங்களை உருவாக்கும் அறிவுப் பயணத்தில் ஈழத்தமிழ் அறிவுருவாக்க மரபானது அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் அறிந்து கொண்டு ஆதிக்க நீக்கம் பெற்ற உலகங்களை உருவாக்கும் நோக்கில் மீளுருவாக்கம் செய்து கொண்டு முன்னேறுவது அடிப்படையானதாகும்.

ஈழத்தமிழர் நிலைநின்று உலகை எதிர்கொள்ளும் அறிவுருவாக்கம் என்பது உலகந்தழுவிய இத்தகைய நோக்கு நிலைகளுடன் இணைந்த பயணமாகும்.

மனிதம் அகற்றப்பட்ட நவதாராளவாத அறிவுமுறை, அறிவுருவாக்க முறை என்பன சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்பட்ட, படைப்பாற்றல் திறன் மழுங்கடிக்கப்பட்ட, விமரிசன நோக்கு மழுங்கடிக்கப்பட்ட தனித்துப்போன மனிதர்களின் கூடாரமாக உலகை மிகவேகமாக கபளீகரம் செய்து வருகின்றது.

இந்தப் பின்னணியில், மனித சமூகங்களதும், எல்லா உயிர்களதும் இயற்கையினதும் பசுமையான உலக இருப்பிற்கான உலகுதழுவிய மக்கள் மைய அறிவுருவாக்க மரபின் தொன்மையையும் தொடர்ச்சியையும் மீளவும் நினைவுக்கு கொண்டு வருவதும்; நிகழ்கால, எதிர்கால முன்னெடுப்பிற்கான தன்னம்பிக்கையுடன் இயங்குவதற்கான உரையாடலை உலகத் தாய்மொழிகள் தினம் 21.02.2024இல் வலியுறுத்திக் கொள்வோமாக.

பேராசிரியர் சி.ஜெயசங்கர்