விஷேட நீதிமன்ற குழாமை அமைத்து சிறுமி கியான்சிக்காவின் வழக்கை துரிதப்படுத்துக

. போராட்டத்தில் வலியுறுத்து

( வாஸ் கூஞ்ஞ)

தலைமன்னார் பொலிஸ் பிரிவில் தலைமன்னார் ஊர்மனையில் பத்து வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபருக்கான விசாரனையை துரிதப்படுத்தி தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் கிராம மக்களின் சார்பாக குறிப்பிட்ட ஒரு பகுதினரே திங்கள் கிழமை (19) காலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் முன்பாக பதாதைகள் ஏந்தியவாறு அமைதியான முறையில் இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கடந்த வியாழக்கிழமை (15) மாலை காணாமல்போன பத்து வயது மாணவி ஆன் கியான்சிதா அடுத்த நாள் வெள்ளிக்கிழமை (16) அன்று காலையிலேயே இவவின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள தென்னந் தோட்டத்தின் வேலியோரத்தில் சடலமாக மீட்கப்பட்டாள்.

இவரின் மரணம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து தெறித்தே கொலை செய்யப்பட்டதாக உடல் கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியின் நல்லடக்கம் ஞாயிற்றுக் கிழமை (18) அவ்வூர் மக்கள் அனைவரினதும் பங்களிப்புடன் மிக சோகத்துடன் இடம்பெற்றது.

இந்த நிலையில் இச்சிறுமியின் படுகொலைக்கு காரணமானவர் என தெரிவிக்கப்படும் சந்தேக நபரை தலைமன்னார் பொலிசார் ஏற்கனவே மன்றில் பெற்றுக் கொண்ட கட்டளைக்கு அமைவாக விசாரணையை மேற்கொண்டபின் திங்கள் கிழமை (19) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டபோதே நீதிமன்றின் முன்பாக இக் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளில் ‘மங்கையராய் பிறப்பதிங்கு மாதவமா மாபாதகமா’ ‘குட்டி தேவதையின் மௌனமான அலறல்களுக்கு குரல் கொடுங்கள்’ ‘பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கு’ ‘விஷேட விசாரணைக்கு பொலிஸ் குழுவை நியமிக்கவும்’ இன்னும் எத்தனை வித்தியா? ஆயிஷா? கியான்சிதா? ‘கியான்சிதாவுக்கு நீதி கடைக்குமா?’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இங்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததையிட்டு பொலிசார் சந்தேக நபரை மிகவும் பாதுகாப்பான முறையில் மன்றில் சந்தேக நபைரை முன்னிலைப் படுத்தவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபரை எதிர்வரும் 29.02.2024 வரை விளக்க மறியலில் வைக்கும்படி நீதவான் கட்டளைப் பிறப்பித்தார்.