ஐஎஸ்ஆர்சீ. அமைப்பு வட மாகாணத்தில் அபிவிருத்தி திட்டங்களை பரவலாக்க மன்னாரில் அலுவலகம் திறப்பு.

வாஸ் கூஞ்ஞ)

கல்வி , வாழ்வாதாரம் போன்றவற்றிற்கு உதவிக்களைச் செய்து வரும் இஸ்லாமிய உதவிக் குழு அமைப்பானது (ஐஎஸ்ஆர்சீ) இஸ்லாமிய மக்களுக்கு மட்டும் உதவி செய்யும் அமைப்பாக இருக்காது சகல இன மக்களுக்கும் உதவி செய்யும் நோக்குடன் இதன் அமைப்பின் வட மாகாணத்துக்கான அலுவலகம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது.

இவ் அமைப்பின் பணிப்பாளர் அஸனார் மொகமட் மிஹ்லர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இவ் அலுவலகத்தை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் வியாழக்கிழமை (15) காலை சம்பிரதாய முறைப்படி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர் திரு.சஞ்ஜீவ விமலகுணரத்தின . மன்னார் முன்னாள் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் உட்பட மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இவ் அமைப்பானது இருபது வருடங்களாக நாட்டில் இயங்கி வருகின்றபோதும் மன்னாரில் ஆறு வருடங்களாக அலுவலகம் இன்றிய நிலையில் இயங்கி வந்துள்ளது.

அதிகமாக இது முஸ்லீம் மக்களுக்கு என தனது அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தபோதும் தற்பொழுது அனைத்து இன மக்களுக்கும் குறிப்பாக பெற்றோர் அற்ற பிள்ளைகளை பராமரிப்பது , மாணவர்களின் கல்விக்கான உதவிகள் . வீட்டுத் திட்டம் , குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பது , குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வட்டியில்லாத கடன் வசதிகள் , மீனவர்களுக்கான உதவிகள் மற்றும் வீட்டுத் தோட்டம் போன்ற உதவிகள் இவ் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

திறக்கப்பட்ட இந்த அலுவலகத்தை மையமாக வைத்து வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் இதன் உதவிகள் பரவலாக்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.