தமிழ்த் திரைக்கு புதிய வெளிச்சம் ஏற்றிய படைப்பாளி ஈழத்தின் அமிர்தகழியில் பிறந்த பாலு. பாலுமகேந்திரா

நவீனன்
(பாலுமகேந்திராவின் பத்தாவது 
நினைவு தினத்தையொட்டி)
தமிழ்த்திரையின் ஒப்பற்ற ஒளிப்பதிவாளரும், சிறந்த இயக்குநருமான பாலுமகேந்திரா என்ற திரையுலக படைப்பாளியின் நினைவு
தினம் 2014 பிப்ரவரி 13ம் நாளாகும்
பெரும்பாலும் பாலுமகேந்திராவை ஒரு ஒளிப்பதிவாளராகவே பலராலும் அறியப்பட்டவர். ஆயினும் அவர் ஒளிப்பதிவாளர் மட்டுமின்றி படத்தொகுப்பு, கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு என கலைக்காக தன்னை அர்பணித்தியுள்ளார். குறிப்பாக, இவர் இந்தியாவின் மிக சிறந்த ஒளிப்பதிவாளர் ஆவார்.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலுமகேந்திரா மூன்று முறை பெற்றுள்ள பாலுமகேந்திரா ஒளியால் தமிழ்த் திரைக்கு புதிய வெளிச்சமேற்றிய படைப்பாளி. சமகாலத் தமிழர் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் 23 திரைப்படங்களை
பாலு மகேந்திரா இயக்கியுள்ளார்.
அவர் இயக்கிய படங்கள் யதார்த்தத்தையும் இயல்பையும் பதிவு செய்து நிஜ வாழ்க்கைக்கு மிக நெருக்கமான படங்களாக இருந்தன. தமிழ் சினிமாவில் அவரளவுக்கு யதார்த்தத்துக்கு நெருக்கமான படங்களைக் கொடுத்தவர் வேறொருவரில்லை என்றே கூறலாம்.
ஈழத்தின் அமிர்தகழியில் பிறந்த பாலு:
1939 மே 20 ஆம் நாளில் ஈழத்தின் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா.
கோகிலா, மறுபடியும், அழியாத கோலங்கள் வீடு, சந்தியாராகம், வண்ணவண்ணபூக்கள் ஆகியன இவரது பிரபல்யமான படைப்புக்களில் சில. “தலைமுறைகள்” இவரது இறுதித் திரைப்படமாகும்.
பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக பாலுமகேந்திரா கூறியுள்ளார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகியது.
பாலுமகேந்திராவுக்கு என்றும் தனியிடம் :
தமிழ் சினிமாவில், சிலரது இடங்களை எவராலும் பிடிக்கவே முடியாது. சிலரைப் போல எவராலும் ரசிக மனங்களைத் தொடவே முடியாது. இந்த இரண்டுக்கும் சொந்தக்காரர்கள் பலர் உண்டு. அதில், பாலுமகேந்திராவுக்குத் தனியிடம் உண்டு.
பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 இல் தங்கப்பதக்கம் பெற்றார். ஆயினும் ஆரம்பக் கல்வியை ஈழத்தில் மட்டு புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். பின்னர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார்.
பாலு மகேந்திராவின் திரைப்பட நுழைவாக,அவரது பட்டப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை ‘செம்மீன்’ படப்புகழ் ராமு காரியத் அவரது ‘நெல்லு’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் ‘சுக்கு’,’ ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி’ ‘சட்டக்காரி’ பி என் மேனோனின் ‘பணிமுடக்கு’ போன்றவை முக்கியமான படங்கள்.
தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான ‘கோகிலா’வை கன்னட மொழியில் இயக்கினார்.
பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியாயிற்று. 1978இல் தமிழில் அவரது முதல் படமான ‘அழியாத கோலங்கள்’ வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தியாவில் பல்வேறு சாதனைகளையும், புகழையும் பெற்ற இயக்குநர்களுக்கு, திரைப்படம் எடுக்க தூண்டுகோலாக இருந்த மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா
சின்னத் திரையிலும் தன் கைவண்ணத்தை நிரூபித்துள்ளார்.
கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக் காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார். இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.
குவிந்த விருதுகளும் பாராட்டுகளும்:
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார்.
அத்துடன் இன்று முன்னணி இயங்குநர்களாக இருக்கும் வெற்றிமாறன், ராம், சீனுராமசாமி, பாலா ஆகியோருக்கு திரைப்படம் இயக்க ஆசிரியராக இருந்தவர் பாலுமகேந்திரா.
பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறமை:
ஒரு ஒளிப்பதிவாளராக இயற்கையான ஒளிகளைக் கொண்டே சிறந்த காட்சி அனுபவத்தை உருவாக்குவதில் அசாத்தியமான வல்லமை பெற்றிருந்தார் பாலு மகேந்திரா. ‘செம்மீன்’ இயக்குநரின் ‘நெல்லு’ திரைப்படம், பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவில் உருவானது. படம் பார்த்தவர்கள் திகைத்து நின்றார்கள். கேரளத்தில் இருந்து கன்னட தேசத்தில், படமொன்றை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். அந்தக் கன்னடப் படத்தின் பெயர் ‘கோகிலா’ பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு நுட்பங்களை அக்காலத்தில் கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
சிறந்த இலக்கிய வாசகர்
பாலு மகேந்திரா படைப்பாளியாக மட்டுமல்லாமல் சிறந்த வாசகராகவும் இருந்தார். அவருடைய படங்கள் சினிமாவின் மசாலாக்களையும் முழுமையாகத் தவிர்த்திருந்ததற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம். தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்த முக்கியமான இலக்கிய நூல்களை வாசித்து அவற்றைத் திரைக்கதையாக்கவும் திரைவடிவம் கொடுக்கவும் முயற்சித்துவந்தார்.
உண்மையில் சில முயற்சிகள் வெற்றிபெறவும் செய்தன. இருந்தாலும் ஒரு நல்ல சிறுகதையையோ நாவலையோ அதற்கு இணையான நல்ல சினிமாவாக மாற்ற முடியாது என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். ஏனென்றால்,’ஒரு கதை ஒரு நல்ல நாவலாக உருப்பெற்றுவிட்டால் அக்கதை அதற்கான மிகச் சரியான ஊடகத்தை ஏற்கெனவே கண்டடைந்துவிட்டது. அதை இன்னொரு ஊடகமான சினிமாவுக்கு அதே அளவு சிறப்புடன் கடத்த முடியாது’ என்று அவர் கூறியிருப்பதாக அவருடைய தலைசிறந்த சீடர்களில் ஒருவரான இயக்குநர் வெற்றிமாறன் அடிக்கடி குறிப்பிடுவார்.
யதார்த்தமான படைப்புகளைத் தந்து, நம்மை என்னவோ செய்துவிடும் திறன், பாலுமகேந்திராவுக்கு கைவந்த கலை.
அவரின் திரைப்படம் என்றாலே அதில் வண்ணங்களும் வெளிச்சங்களும் நிறைந்த காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு வண்ணங்கள் மீதும் ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் வெவ்வேறாக இருக்கும்.
இன்றைக்கும் இவர் படங்கள் பல தரப்பினரின் விவாதங்களும் விமர்சங்களும் எழுந்த வண்ணமாகவே உள்ளது. இன்று பல படங்கள் உருவாக பாலுமஹேந்திரா படத்தில் உள்ள ஒரு சில காட்சிகளே கருப்பொருளாக உள்ளது என்பது அவரின் படைப்பாற்றலுக்கு கிடைத்த வரலாற்றுச் சான்றாகும்.