மன்னாரில் மகற்பேறு தாய்மாருக்கு வரப்பிரசாதம்.

( வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மகற்பேறு வாட்கள் மன்னார் நலன்புரி ஐக்கிய இராச்சிய அமைப்பின் நிதி உதவியில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளதால் குழந்தை பெறும் தாய்மாருக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என மகற்பேறு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஈ.புஸ்பகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் பொது வைத்தியசாலை மகற்பேறு வாட்கள் மன்னார் நலன்புரி ஐக்கிய இராச்சிய அமைப்பின் நிதி உதவியில நவீன முறையில் புணரமைப்பு செய்யப்பட்டு அதற்கான உபகரணங்களையும் வழங்கிய திறப்ப விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) மன்னார் பொது வைத்தியசாலையில் காலையில் இடம்பெற்றது.

இதன்போது மன்னார் வைத்தியசாலை மகற்பேறு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஈ.புஸ்பகாந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்கு பற்சிக்காகச் சென்று வருவோர் அங்கு பெற்ற பயிற்சியை உள்நாட்டில் அமுல் செய்ய வேண்டும் என அரசு எதிர்பார்த்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் தான் வெளிநாட்டில் பெற்ற அனுபவத்தை இங்கு குறிப்பாக மன்னாரில் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் இருந்தேன்.

அப்பொழுதுதான் மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் அவர்கள் ஐக்கிய இராட்சிய மன்னார் நலன்புரி அமைப்புடன் மன்னாரில் ஒரு சிறந்த மகற்பேறு வாட்களை அமைப்தற்கான திட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த காலத்தில் மகற்பேற்று வாட்களில் குழந்தைகள் பெற்ற பின் தாய்மார் மறைவான முறையில் தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட முடியாத நிலையிலேயே இருந்து வந்தனர்.

இதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் முதலில் எற்பட்டது. அடுத்தது இந்த வாட்கள் அழகாக துப்பரவாக அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இந்த வாட்டானது ஒரு பாதுகாப்பு அற்ற நிலையில் காணப்பட்டதால் மின்சாரம் மற்றும் கட்டிடத்தை புனரமைக்க வேண்டிய அவசியமும் எனக்குத் தோன்றியது.

மேலும் குழந்தையை பெற்றெடுத்த ஒரு தாய்க்கு பாதுகாப்புக்கு அவர்களின் உறவினர் எவரும் அனுமதிக்க முடியாத நிலை தொடர்ந்து வந்தது.

இதனால் இவைகள் யாவும் மாற்றம் பெற வேண்டும் என்று இங்கு எனது மூன்று வருடகால சேவையில் நான் வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு சென்று வந்தபின் சிந்தித்து வந்தேன்.

ஆனால் இன்றிலிருந்து ஒரு தாய் குழந்தையை பெறுவதற்கு குழந்தை பெறும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அவுடன் அவரின் துணைக்கு ஒரு பெண்ணும் உட்செல்ல அனுமதிக்க வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு கடமை புரியும் தாதிகளோடு அல்லது வைத்தியர்களோடு முரன்படும் நிலை தோன்றுவதற்கு இனி இடமில்லை.

அத்துடன் இவ்வாட்டில் கடமை புரியும் ஊழியர்களின் கஷ்ட நிலைகளையும் பொது மக்கள் காணவும் இங்கு வாய்ப்பாக அமையும் என நினைக்கின்றேன்.

ஆகவே எதிர்காலதத்pல் குழந்தை பெறும் யாவருக்கும் இந்த வைத்தியசாலையில் சகல விதமான சகல வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரியதாக இருக்கின்றது என மன்னார் பொது வைத்தியசாலை மகற்பேறு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஈ.புஸ்பகாந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)