நவீன வாழ்வில் யோகாவின் முக்கியத்துவமும் ஆரோக்கியமும்

யோகா போதனாசிரியர்- திரு.லோ.தீபாகரன் (JP)BA.Dip Phi, MA

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்களை பார்த்து வடிவமைத்தார்கள் என்று பல தகவல்கள் இருந்தாலும் . இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான். “யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.”ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

தற்போதுள்ள இயந்திரமயமான வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் யோகா மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. யோகா செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சக்தியும் கிடைக்கிறது மன அழுத்தம் குறைகிறது. மேலும் பலவிதமான நோய்கள் தீரவும் யோகா பயன்படுகிறது. அனைத்து யோகாசனங்களும் செய்ய வேண்டும் என்பதில்லை. அந்தந்த நோய்கள் தீர என்று சில குறிப்பிட்ட ஆசனங்கள் உள்ளன. அவற்றை மட்டும் செய்தால் போதுமானது. சில குறிப்பிட்ட யோகாசனங்கள் நம் உடலில் உள்ள நோய்களை தீர்க்கும் ஆற்றல் பெற்றவை

யோகா என்பது மிக முக்கியமாக ஓர் ஆன்மீக அறிவுத்துறை புரிந்துகொள்ள இயலாத அறிவியலின் அடிப்படையிலானது. உடலுக்கும் மனதிற்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே ஒத்திசைவைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துவது யோகா, ஆரோக்கிய வாழ்விற்கான கலையும் அறிவியலுமாகும். யோகா காட்டும் முழுமையான அணுகுமுறையாக மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது. வாழ்வின் அனைத்து நோய்கள் வராமல் தடுப்பது அல்லது குறைப்பது, ஆரோக்கிய மேம்பாடு, வாழ்க்கை முறைகளோடு தொடர்புடைய பலவிதமான நலக் கேடுகளையும் நிர்வகிப்பது ஆகியவற்றில் உதவக்கூடியதாக யோகா அமைந்திருக்கிறது. யோகா இப்போது உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கிறது. சில வகை நோய்களை நிர்வகிப்பதற்கு திறம்படப் பயன்படுகிறது என்பது மட்டுமல்லாமல், யோகாவைப் பயில்வோருக்கு மனநலம், மனக்கிளர்ச்சிகளிலிருந்து விடுபடுதல் போன்ற துயர் தீர்க்கும் வல்லமைகளையும், நல உணர்வையும் தருவதனால் யோகா உலகம் முழுவதிலும் பிரபலமானதாகத்திகழ்கிறது.

ஆக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக யோகா உலகம் முழுவதிலும் தற்போது செயல்பட்டுவருகிறது. உணர்வு நிலையின் பழம்பெரும் பண்பாடு, விழிப்பு நிலையின் அறிவியல், சமநிலை மன உணர்வு, பணியில் சிறப்பு ஆகியவற்றைத் தருவதாக யோகா புரிந்துகொள்ளப்படுகிறது. அற்புதமான இத்தகைய பண்பாடு அப்படியே உலககெங்கும் பரவ வேண்டும். உலகெங்குமுள்ள ஒவ்வொருவரும் இதனால் பயன்பெற வேண்டும் என்பது மிக முக்கியமானது. உடலை வளர்ப்பதற்கும், மன அமைதிக்குமான வெறும் ஆசனங்களும், பிரணாயமமே யோகா என்று துரதிஸ்டவசமாக தவறுதலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மாறாக, யோகா என்பது ஒரு முழுமையான அணுகுமுறையைக் கொண்டிருப்பது. ஒரு வாழ்க்கை முறையாக யோகாவை உள்ளீர்த்துக் கொள்ளும்போது அது வாழ்க்கையை புரட்சிகரமாக மாற்றி அமைக்கும். மனித குலத்திற்கான மதிப்புமிக்க விண்ணுலகப் பரிசாகும் இது. சாதாரண ஆளுமையை தனித்தன்மை கொண்ட சிறப்பான ஆளுமையாக மாற்றக் கூடியது மட்டும் அன்றி யோகா மனித ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது

சுய மேம்பாட்டிற்கான முயற்சிகள் அனைத்துமே யோகாவாகும். தன்னைப் பற்றிய சிறந்த அறிவையும், சுய கட்டுப்பாட்டையும் பெறுவதற்காக நீண்ட ஆரோக்கியத்தை பெறுவதற்காக ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு காலத்திலும் மனிதன் தன்னை கட்டுப்பாடு ஆக்கிக் கொள்கிறான். இந்தியாவில் இது யோகா எனும் வழி முறையின் மூலமாக சாத்தியப்பட்டுள்ளது. ஒருவரின் ஆளுமையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உண்மையான சுயத்தினைக் கண்டறிவதற்கு உதவக்கூடிய ஒரு முழுமையான வழிமுறை யோகாவாகும். யோகிகள் கண்டறிந்தவற்றிலும், கண்டுணர்ந்த வற்றிலும் பெரும்பகுதி இன்றும்கூட, நேரடியான பொருத்தம் உடையதாக உள்ளது. ஆழ்ந்த மன அமைதி, ஐயங்களைப் போக்கிக் கொள்வது, வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிவது என்பன போன்ற வாழ்க்கையின் மிக அடிப்படையான பிரச்னைகளில் யோககள்p தனது சிந்தனையை நீண்ட காலம் செலுத்துகிறாரகள்;. அதற்கான தீர்வுகளைக் கண்டறிகிறார். இரக்கமும், பரிவும் கொண்ட முழுத்தெளிவுடன் கூடிய அழகிய வாழ்க்கையை வாழ்வதற்கு எவருக்குமே இது ஒரு சந்தர்ப்பம ஆகும்.

யோகா எனப்படும் வாழ்க்கை அறிவியலின் மூலம் ஒருவர் கற்றுக் கொள்வது இதைத்தான் பழங்காலத்திலும் தற்காலத்திலும் யோகா மனித நாகரிகம் உதயமான போதே யோகா பயிற்சியும் ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் அழிவில்லாத பண்பாடு யோகா என பரவலாக பெரிதும் கருதப்படுகிறது. மனித குலத்தின் ஆன்மீக, லோகாயத வாழ்க்கை மேம்பாட்டிற்கு உறுதுணை புரியக்கூடியதாக யோகா நிரூபணமாகியுள்ளது. பலவகைப்பட்ட யோகா தத்துவங்கள், பாரம்பரியங்கள், மரபு வழிகள், குருசிஷ்ய பரம்பரைகள் போன்றவை வெவ்வேறு வகைப்பட்ட யோகா பரம்பரைகள் போன்றவை வெவ்வேறு வகைப்பட்ட யோகா பாரம்பரியங்களைச் சேர்ந்த பள்ளிகள் உருவாவதற்கு வழி செய்தன

எடுத்துக்காட்டாக: ஜனன யோகா, பக்தியோகா, கர்ம யோகா, தியான யோகா, மந்திர யோகா, லயயோகா, ராஜ யோகா, ஜெயின் யோகா, பௌத்த யோகா போன்றவை. ஒவ்வொரு குரு சீடர் பரம்பரையும் அதற்கென தனிப்பட்ட கொள்கைகள், பயிற்சி முறைகள் ஆகியவற்றைக் கொண்டதாக உள்ளன. யோகாவின் மூலாதாரமான நோக்கங்களை அடைய இவை நம்மை இட்டுச் செல்கின்றன. யோகா நிலமாகிய இந்தியாவில் நிலவும் வெவ்வேறு வகையான சமூகப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாயங்களும் அன்பையும், சமநிலையையும், பிற படைப்புகள் அனைத்தின் மீதான கருணை மிகுந்த பார்வையையும் பிரதி பலிக்கின்றன. பல்வேறு நிறங்களும், அழகுமிகு வண்ணங்களும் கொண்டிருக்கும் யோகா சாதனா அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான ஆரோக்கியத்திற்கான சஞ்சீவியாகக் கருதப்படுகிறது.

தனிநபர் அளவிலும், சமூகத்தின் அளவிலும் விசாலமான பரந்த நலம் பேணும் யோகாவின் போக்கு அனைத்து மதங்கள், இனங்கள், தேசங்களைச் சேர்ந்த மக்களும் பின்பற்றுவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தற்காலத்தில் யோகா பயிற்சியின் மூலம் பல கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இத்தகைய பயிற்சிகள் யாவுமே பழங்காலம் முதல் இன்று வரையிலான திறமைமிக்க யோகா பயிற்றுநர்களால் வளர்த்துப் பாதுகாக்கப்பட்டவை. உலகெங்கிலும் யோகா ஒரு வாழ்க்கைமுறை அங்கமாகவே ஆகி இருக்கிறது. அதிகமாக பயிலப்படும் யோகா சாதனாக்கள். யாமா, நியமா, ஆசனா, பிரணா யாமா, பிரத்ய ஹரா, தரணா, தியானா, சமாதி ஃ சம்யாமா, பன்தா, முத்ரா, ஷத் கர்மா, யுக்த- கர்மா, யுக்த-அஹரா, மந்திர ஜெபா போன்றவை.
தற்காலத்தில், தற்காலிக நிவாரணங்களை மட்டுமே கொடுக்க முடிந்த அறிவியல் வளர்ச்சியால் மக்களுக்கு அமைதியைக் கொடுக்க முடியவில்லை பக்கவிளைவில்லாத ஆரோக்கிய வாழ்வை கொடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மையான நிலைப்பாடாகக் காணப்படுகின்றது. ஆனால் எமது முன்னோர்களாகிய யோகிகளும், ஞானிகளும் ஏறக்குறைய பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உடல், உள வளத்தையும், நலத்தையும் கொடுக்கின்ற வழிமுறைகளைத் தெளிவாகக் கூறிச் சென்றுள்ளனர். இவற்றுள் முக்கியமானவையாக யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி தாவரஉணவுமுறை, ஆயுர்வேத வைத்தியமுறை என்பவற்றைக் கருதமுடியும். நம் முன்னோர்களால் 84 இலட்சம் வரையிலான யோகாசனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கற்றறிந்தோர் கூறியுள்ளனர்.
தற்காலத்திலே மேலைத்தேயத்தவர்கள், உடல், உளவளத்தைக் கொடுக்கும் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி மற்றும் தாவரஉணவுமுறைகளில் பெரிதும் நாட்டங்கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
மேலைத்தேய பாடமுறைகளில் இவைகள் சேர்க்கப்பட்டுக் கற்பிக்கப்படுவது, இவற்றின் சிறப்புக்களை உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. புலம்பெயர்ந்த தமிழ்மக்களிலும் மேற்கூறிய பயிற்சிமுறைகளை முறையாகக் கற்றறிந்த பலர் காணப்படுகின்றனர். ஒவ்வொருவரும் தமக்கேற்ற வழிமுறைகளில் இவற்றைக் கற்பித்து வருகின்றார்கள்.
யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி என்பன ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக விளங்குகின்றன. இவற்றைக் கற்போர் இருவகையினராகக் காணப்படுகின்றனர். உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியம் பெற விரும்புவோர் ஒரு வகையினராகவும், ஆன்மீகத் தேடலில் நாட்டங்கொண்டு தொடர்ந்து கற்போர் இன்னொரு வகையினராகவும் காணப்படுகின்றனர்.
கால், கைகளை மடிக்கமுடியாத நோய்கள், நாடிப்பிடிப்பு, தலையிடி, விபத்தின்மூலம் ஏற்படும் மறதிநோய், மனஅழுத்தம் போன்றவற்றோடு, உடல் ஆரோக்கியம் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், ஆன்மீக நோக்குடையோர் எனப் பல்வேறு நிலையிலான மாணவர்கள், மேற்கூறிய யோகாசன கற்கைநெறிகள் மூலமாக அவரவர்களுக்கு ஏற்ற விதமான யோகா, தியான, மூச்சுப்பயிற்சிகளை கற்கலாம், ஆரோக்கியம் பெற உதவுவது,; யோகா பயிற்சியின் மிகச் சிறப்பான அடிப்படை அம்சமாக விளங்குகின்றது. அவ்வாறே யோகப்பயிற்சியில் இணையும் ஒவ்வொருவருடைய உடல்நிலை, வயது என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இலகுவான பயிற்சிகளிலிருந்தே யோகப்பயிற்சிகள், மூச்சுப்பயிற்சிகள் என்பனவற்றை கற்பதன் மூலம் மனிதர்கள் உளத்தாலும் உடலாலும் ஆரோக்கிய வாழ்வை பெறலாம்

பத்திரிக்கையை முழுமையாக வாசிக்க

supeedsam_Sunday_11_02_2024