( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் தீவில் மின் உற்பத்திக்கான காற்றாலை அமைப்பதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைவதுடன் மன்னார் தீவும் சொற்பக் காலத்துக்குள் கடலுக்குள் அமிழும் அபாயமும் தோன்றியுள்ளதாக மக்கள் இங்கு காலத்துக்கு காலம் போராட்டங்களை நடாத்தி வருவதுடன் பல தரப்பினருக்கும் தங்கள் அவல நிலைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழு மற்றும் மன்னார் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் மாவட்ட பொது அமைப்பு உட்பட பலர் தொடர்ச்சியான முறையில் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் நிலையான ஆற்றல் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மேலதிக செயலாளர் இளங்கோ அவர்களின் தலைமையில் பல திணைக்களங்களின் தலைவர்கள் கொண்ட ஒரு குழுவினர் வெள்ளிக் கிழமை (09) மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டு மன்னார் தீவில் மேலும் காற்றாலை அமைக்கும் தொடர்பாக மன்னார் மாவட்ட செயலகத்தில் பொது அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதில் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினர் , மன்னார் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் , மாவட்ட பொது அமைப்பின் பிரதிநிதிகள் என முக்கியஸ்தர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மன்னார் தீவில் தொடர்ந்தும் காற்றாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தபோதும் இதற்கு கலந்து கொண்ட மன்னார் அமைப்பக்களின் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே காரசாரமான வாதங்கள் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
மன்னாரில் காற்றாலை அமைப்பதற்கு தாங்கள் எதிர்க்கவில்லை என தெரிவித்துள்ள மன்னார் மாவட்ட பிரதிநிதிகள் இவற்றை மன்னார் தீவுக்கு அப்பால் நிர்மானிக்கும்படியும் தெரிவித்தனர்.
ஆனால் மன்னார் தீவில் இக்காலை அமைக்கும் திட்டம் தொடருமாகில் மன்னார் தீவு மக்களை கொன்று விட்டே நீங்கள் இத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவற் காற்றாலை சக்தி திட்டத்தின் சுற்றாடல் தாக்க மதிப்பிட்டறிக்கையை முப்பது நாட்களுக்குள் எழுத்து மூலம் தெரிவிக்கும்படி மன்னார் மக்களுக்கு தற்பொழுது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.