மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

வி.சுகிர்தகுமார் 

 அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கம் மற்றும் அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் 2024 ஆம் ஆண்டில் கணித விஞ்ஞான பிரிவில் தோற்றும் மாணவர்களுக்குரிய மேலதிக பயிற்சி வகுப்புக்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (06) நடைபெற்றது.
தேசிய பாடசாலையின் அதிபர் ஜயந்தன் தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளரும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வி.பபாகரன் சங்கத்தின் உபதலைவரும் பொறியியலாளருமான லோகிஸ் சங்கத்தின் பொருளாளரும் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியருமான குணாளினி ஆலையடிவேம்பு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி மயூரி மயூரதன் பாடசாலை பிரதி அதிபர் மதியழகன் அபிவிருத்தி குழு செயலாளர் அகிலன் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களான சட்டத்தரணியும் மேலதி மாவட்ட பதிவாளருமான பிரதீப் அபிவிருத்தி உத்தியோகத்தர் புவனேந்திரன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரும் ஊடகவியலாளருமான வி.சுகிர்தகுமார் உள்ளிட்ட வளவாளர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு கல்விக்கோட்டம் மாத்திரமன்றி திருக்கோவில் கல்வி வலயத்தில் கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் அடைவு மட்டம் கடந்த காலத்தில் குறைவாக காணப்பட்டது.
இதற்கான பிரதான காரணமாக மாணவர்களுக்கு போதிய அளவு பயிற்சி வகுப்புக்களை இடம்பெறாமை மாணவர்களிடையே போதிய நிதி வசதி இன்மை போன்ற காரணிகள் தாக்கம் செலுத்தியமை அவதானிக்கப்பட்டது.
இதனை கருத்திற் கொண்டே அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை பழைய மாணவர் சங்கமானது அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பு  மற்றும் தனவந்தர்கள் போன்றோhரின் நிதிப்பங்களிப்புடன் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதனூடாக அடைவு மட்டத்தினை உயர்த்தி சிறந்த பெறுபேறுகளை உயர்தரப்பரீட்சையில் பெற்று வலயத்தில் அதிகளவான வைத்தியர்களையும் பொறியியலாளர்களையும் உருவாக்கும் இப்பணியை முன்னெடுத்துள்ளது.
இத்திட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் பாராட்டினை தெரிவித்துக்கொண்டனர்.
இத்திட்டமானது தொடர்ந்து வரும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என்பதோடு மாணவர்களும் பெற்றோர்களும் பாடசாலை அதிபர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இங்கு பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நிதிப்பங்களிப்பு வழங்கும்; அவுஸ்திரேலியா தமிழ் பொறியியலாளர் அமைப்பிற்கும் விசேட நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
அத்தோடு வகுப்புக்கள் நடைபெறும் நேரம் காலம் நிதிப்பங்களிப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்;டது