மட்டக்களப்பில் உலக உணவு திட்டத்தினால் விவசாய மேம்பாட்டிற்கு உதவித்திட்டங்கள் வழங்கிவைப்பு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

உலக உணவு திட்டத்தின் வீட்டுத்தோட்ட முறைமையின் ஊடாக பாடசாலை  மாணவர்களுக்கு போசாக்கான உணவினை வழங்கும்  நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  16 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் உணவு வழங்குனர்களுக்கான உபகரணங்கள் ஏறாவூர்பற்று  பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று (03) திகதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், ஏறாவூர்பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி நிருபா பிருந்தன் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

உலக உணவுத்திட்டத்தின் மூலம்  ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான சமைத்த உணவுகளை வழங்கும் வழங்குனர்களை
ஊக்குவிப்பதற்கான செயற்திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது 20  நபர்களுக்கு  வீட்டுத் தோட்ட உற்பத்தி செய்தற்கான விதை பொருட்கள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான உபகரணங்கள் மற்றும் கோழிகளுக்கான உணவு, மருத்துவ பொருட்கள் என்பன இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில்   மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான ஆர். ஜதிஸ்குமார்,  நிர்மலராஜ், ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதாகரன், என உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.