கொக்கட்டிச்சோலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ள ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் தொடர்பான ஊடக சந்திப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

பிரம்ம குமாரிகள் நிலையத்தினால் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில்   அங்குரார்ப்பணம் செய்யவுள்ள ஜோதிர்லிங்க அருங்காட்சியகம் தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு  கள்ளியங்காடு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

குறித்த ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜ யோக நிலையத்தின் பொறுப்பாளரும்
இலங்கை நிருவாக குழு உறுப்பினருமான சகோதரர் வீ.கே.சுரேஸ் அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்ததுடன், இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையின் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப ஆஸ்திரேலியா நாட்டின் பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் 50 வருட தவயோகியுமான மூத்த ஆன்மீக சகோதரர் சார்லி ஹொக் அவர்கள் இந்தியா உட்பட்ட உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து பல வகையான ஆன்மீக சேவைகளிலும் ஈடுபட்டு வருவதுடன் வெளிநாட்டு சேவைகளில் மிக முக்கிய பங்கினையும் வகிக்கும் மூத்த சகோதரரான இவர் பல நாடுகளின் ஆன்மீக அழைப்புகளுக்கு மத்தியிலும் 10 நாட்கள் இலங்கை நாட்டிற்கான ஆன்மீக சேவைகளுக்காக வருகை தந்திருக்கின்றார்.

குறித்த மூத்த சகோதரர் கண்டி, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையங்களுக்கு சென்று நிகழ்வுகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்.

அதேபோல மூத்த சகோதரர் சார்லி ஹொக் அவர்களுக்கு மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில்  அங்குரார்ப்பணம் செய்யவுள்ள ஜோதிர்லிங்க அருங்காட்சியக நிகழ்விலும் மூத்த சகோதரர் சார்லி ஹொக் கலந்து கொள்ளவுள்ளதுடன் இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்து கொண்டு அருங்காட்சியகத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது என கூறியதுடன், இவ் ஆன்மீக நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.