( வாஸ் கூஞ்ஞ) பேசாலையில் காண்பிக்க இருக்கும் உடக்கு பாஸ் வேடிக்கையான நிகழ்வு அல்ல. அது புனித நிகழ்வாகும். ஆகவே ஒற்றுமையை கடைப்பிடித்து புனிதத்தை பேண வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட்தில் பேசாலையில் தத்ரூபமாக உடக்குகளைக் கொண்டு காண்பிக்கப்படும் பொம்மைப் ‘பாஸ்’ அதாவது இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி இம்முறையும் பெரிய வெள்ளி அன்று பேசாலையில் நடைபெற இருப்பதை முன்னிட்டு இதன் செயல்பாட்டின் ஆரம்ப நிகழ்வை மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை ஞாயிற்றுக் கிழமை (28) ஆரம்பித்து வைத்தார்.
இந் நிகழ்வின்போது ஆயர் தொடர்ந்து உரையாற்றுகையில்
பேசாலையில் நாங்கள் பக்தி முயற்களில் ஒன்றான உடக்கு பாஸ் நிகழ்வுக்கான ஆய்த்த முயற்சியை இன்று (28) ஆரம்பித்து வைக்கின்றோம்.
நான் இந்த மறைமாவட்டத்துக்கு வந்த பின்பு இதுதான் எனக்கு முதல் தடவையாகும். ஆகவே இவற்றை நான் கண்டு கழிப்பதற்காக மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றேன்.
தவக்காலம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சொற்ப நாட்களே காணப்படுகின்றது. ஆகவே தவக்காலத்திலும் இதற்கான வேலைப்பாடுகளையும் ஆயத்தங்களையும் தொடர்ச்சியாக செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.
பெரிய வெள்ளிக்கிழமை இந்த உடக்கு பாஸ் நிகழ்வை நீங்கள் ஒரு பக்தி முயற்சியாக செயல்படுத்த இருக்கின்றீர்கள்.
இந்த நிகழ்வானது ஒரு வேடிக்கையான நாடகம் அல்ல. மாறாக இயேசுவின் பாடுகளைக் கொண்ட ஒரு பக்தி முயற்சியாகும்.
உங்கள் திறமையினாலும் விடா முயற்சியினாலும் பங்கெடுக்கின்றீர்கள். ஆகவே முதலில் உங்களிடம் ஒற்றுமை இருக்க வேண்டும்.
நாம் இவ்வாறான செல்பாடுகளில் இறங்கும்போது பலவிதமான கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆகவே யாவரும் இது ஒரு பக்தி முயற்சி என்ற எண்ணக் கருத்துடன் செயல்பட வேண்டும் என்று கேட்டு நிற்கின்றேன்.
மேலும் இது ஒரு செப ஆண்டு. இறை மகன் இயேசு பிறந்து 2025 ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாக இருப்பதால் இந்த ஆண்டை செப ஆய்த்த ஆண்டாக பரிசுத்த பாப்பரசர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
ஆகவே இந்த செப ஆண்டுக்குள்ளே இப்படியான பக்தி முயற்றியானது மிகவும் பொருத்தமாகும். ஆகவே இதற்கு பொருத்தமான முறையில் நீங்கள் செயல்பட வேண்டும்.
முன்னையோர் செய்து வந்ததை நீங்கள் பாரம்பரியமாக செயல்படுத்தி வருவதால் நீங்கள் பயப்பக்தியுடன் செயல்படுவீர்கள் என உங்கள் மத்தியில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
இதில் செயல்படும்போது நீங்கள் எக்காரணம் கொண்டும் குடிவெறியோ அல்லது எந்தவித தவறான வார்த்தைகளையும் பாவிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் உண்டு என இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)