அக்கரைப்பற்றில் பட்டப்பகலில் கொள்ளை

வி.சுகிர்தகுமார்

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 7ஃ3 இல். அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (26) பட்டப்பகலில் உட்புகுந்த திருடன் தாலி மற்றும் மாலை உள்ளிட்ட 14 பவுண் மதிக்கத்தக்க தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீட்டில் வசித்துவரும் கணவனும் மனைவியும் தொழிலுக்கு சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் யாருமற்ற நிலையில் திருடன் ஜன்னல் கண்ணாடியை உடைத்து கிரிலை அகற்றி உட்சென்று அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளான்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது சம்பவ தினமான இன்று வைத்தியசாலையில் கடமை புரியும் கணவனும் மனைவியும் வழமைபோன்று தனது இரு பிள்ளைகளையும் சகோதரியிடம் விட்டு விட்டு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
இதேநேரம் வீட்டு உரிமையாளரின் சகோதரி இரு பிள்ளைகளையும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு திருட்டு நடைபெற்றுள்ளதை அவதானித்து அயலவர்களின் உதவியை கோரியுள்ளார்.
ஆயினும் வீட்டின் அலுமாரியில் இருந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதை வீட்டின் உரிமையாளர் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பெரும்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிசார் தீவிர விசாரணையை ஆரம்பித்ததுடன் அம்பாரையில் இருந்து வரவழைக்கப்பட்ட விசேட தடயவியல் பொலிசார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் கொள்ளையிட்டவனை அடையாளம் காணும் நடவடிக்கையில் பிரயத்தனத்துடன் ஈடுபட்டனர்.
இதேநேரம் இச்சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் தோன்றியுள்ளதுடன் பொதுமக்களின் உதவியும் கொள்ளையனை கைது செய்ய பெறப்பட்டதுடன் விசாரணைகள் பல்வேறு கோணங்களிலும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.