(சுமன்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் இன்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2023.11.25ம் திகதி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பினை மேற்கொண்டதன் பேரில் இவர் வெல்லாவெளி பொலிசாரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து இன்றைய தினம் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது நகுலேஸ் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் முன்னாள் போராளிகள் ஜனநாயக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதென்பது இன்னும் இயலாத ஒரு விடயமாகவே இருக்கின்றது.
யுத்தத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் இனவாத அரசியலில் இருந்து மற்றைய இனத்தினை அடிமைப்படுத்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினைக் கொண்டு அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன. எது எவ்வாறு இருந்தாலும் தமிழ் மக்களுக்கான எமது பணிகளை ஒருபோதும் தடுத்துவிட முடியாது.
நான் சிறையில் இருக்கும் போது என்னை வந்து பார்வையிட்டு எனது விடுதலைக்கான முயற்சிகளில் பெரிதும் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உட்பட என்னைப் பல தடவைகள் சிறைச்சாலைக்கு வந்து பார்வையிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், ஜனநயகப் போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உள்ளிட்ட நான் விடுதலை பெற வேண்டும் என எண்ணம் கொண்டு என் விடுதலைக்காக முன்நின்று செயற்பட்ட அரசியற் பிரமுகர்கள், போராளிகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் என்னைப் போன்று எத்தனையோ தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் தொடர்பிலும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குறைந்தபட்சம் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை உரியவர்கள் கையாள வேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன் என்று தெரிவித்திருந்தார்.