ஹஸ்பர் ஏ.எச்._
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையும் இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கமும்
இணைந்து நிர்மாணத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு, ஆலோசனை சேவை, நிர்மாண கைவினைஞர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முன்அறிவு ஊடாக தேசிய தொழிற் தகைமை ( NVQ ) சான்றிதழ்களுக்கு பதிவு செய்யும் தேசிய நடமாடும் வேலைத்திட்டமானது இன்று (18) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் கருத்தின்படி நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த நடமாடும் சேவையின் ஐந்தாம் கட்டமாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிர்மாண ஒப்பந்ததாரர்களுக்கு இச்சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதன்போது உரையாற்றிய திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராய்ச்சி அவர்கள் மாகாணத்தின் நிர்மாணத்துறைக்கு இது மிகவும் முக்கியமானது எனவும், நிர்மாணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது பெரும் மதிப்பை சேர்க்கும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.திருமதி முரளிதரன்,நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி வஜிரா அபயவர்த்தன, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் ரெவின் பெர்னாண்டோ, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் பி.ஏ.பி.வீரசேகர, திருகோணமலை மாவட்ட NCASL பொறியியல் ஆலோசகர் பிரான்சிஸ், INSEE சீமெந்து நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் தனுஷ்க ரத்னகீர்த்தி, CIDA உத்தியோகத்தர்கள் ,நிர்மாண ஒப்பந்தகாரர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.