பொலிசாரின் அடாவடித்தனம் குடும்பஸ்தர் ஒருவர் கால் உடைப்பட்ட நிலையில் வைத்தியசாலையில்

(வாஸ் கூஞ்ஞ) 18.01.2024

பொங்கல் பாட்டி வைக்க வேண்டும் பணத்துடன் வரவும் என மதுபான சாலையிலிருந்து அழைத்த பொலிசார் அவரின் பணத்தில் மது அருந்திவிட்டு அந்நபரை தாக்கிய நிலையில் கால் உடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மன்னாரில் இடம்பெற்றது.

இச் சம்பவம் தொடர்பாக மன்னாரில் மனித உரிமை அலுவலகத்தில் பாதிப்புக்கு உள்ளான நபரின் மனைவி முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்தைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக பாதிப்படைந்துள்ள மன்னார் மூன்றாம்பிட்டியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தை  சித்திரவேல் நகுலேஸ்வரன் (வயது 28) தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதாவது

செவ்வாய் கிழமை (16) இரவு ஏழு மணியளவில் இலுப்பைக்கடவை பொலிசார் தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொங்கல் பாட்டி வைப்பதற்காக ருபா ஐந்தாயிரத்துடன் தாங்கள் மதுபானக் கடையில் நிற்கின்றோம் தன்னை அங்கு வருப்படி அழைப்பு விடுத்தனர். இதற்கமைய நான் பணத்துடன் அவர்கள் நின்ற மதுபானக் கடைக்குச் சென்றிருந்தேன்.

குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற பின் காசு ஐயாயிரத்தையும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்ட பின் மூவாயிரத்துக்கு அவர்கள் மதுபானத்தை அருந்தினர். பின் இரண்டாயிரம் ரூபாவை நீதிமன்றுக்கு கொடுக்க வேண்டும் என்றும் எனக்கு தெரிவித்தனர்.

அதற்கு நான் எனக்கு நீதிமன்றதத்pல் என்ன வழக்கு இருக்கின்றது எனக் கேட்டேன். அவர்கள் என்னை ஏசிவிட்டு என் கைக்கு விலங்கிட்டு ஒரு மோட்டர் சைக்கிளில்  என்னை நடுவில் வைத்துக் கொண்டு முன்னுக்கும் பின்னுக்கும் பொலிசார் இருந்து கொண்டனர்.

தன்னை இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் எனக்கு தெரிவித்தனர்.

சென்று கொண்டிருக்கும் போதே என்னை தாக்கிக் கொண்டே வந்தனர். இடையில் அதாவது தேத்தா வாடிக்கும் பொலிஸ் நிலையத்துக்கும் இடையே செல்லுமபோது என்னை பலமாகத் தாக்கி சைக்கிலிருந்து தள்ளிவிட்டனர்.

அத்துடன் தொடர்ந்து என்னைத் தாக்கினர். என்னை அடிக்க வேண்டாம் எனக் கெஞ்சனேன்.

அந்த நேரத்தில் எனது கால் ஒன்றுக்கு முறிவு ஏற்பட்டு விட்டது என தெரிவித்திருந்தபோதும் அவர்கள் என்னை தொடர்ந்து நையப்புடைத்தனர்.

அந்த சமயத்தில் அதிரடிப் படையினரின் வாகனம் அந்த வழியால் வந்தபொழுது அதில் எற்றிக் கொண்டு பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அப்பொழுது என் உடலால் இரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

பின் ஒரு புத்தகத்தில் எழுதி தன்னிடம் கையெழுத்து வாங்கினர். இதைத் தொடர்ந்து எனது காலுக்கு மட்டை வைத்து கட்டி பின் பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

இதை;தொடர்ந்து என்னை மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டேன் என தெரிவித்துள்ளார்.

எனக்கு ஒரு மாதத் குழந்தை உண்டு. அக்குழந்தைக்கும் குடல் சுறுங்கியுள்ளமையால் குருநாகல் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது.

சத்திர சிகிச்சை அளிக்கப்பட்ட இடத்தில் எனது குழந்தைக்கு ஒரு சிறு கட்டு எற்பட்டிருந்தது. இதற்கு அன்றைய தினம் (16) மன்னாரில் தனியார் வைத்தியரிடம் காண்பித்து மருந்து எடுத்து விட்டு பிற்பகல் ஆறு மணியளவில்தான் வீடு போய் சேர்ந்தேன்.

இதற்கு முன் இந்த பொலிசார் என்னை வீடு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பின்பே தன்னை மதுபான சாலைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மன்னாரில் மனித உரிமை அலுவலகத்தில் பாதிப்புக்கு உள்ளான நபரின் மனைவி முறையீடு செய்யப்பட்ட நிலையிலும் மன்னார் மாவட்ட நீதவான் நீதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி புதன்கிழமை (17)  மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்று பாதிப்டைந்த நபரை விசாரனைக்கு உட்படுத்தியிருந்தார்.

அத்துடன் இரு பிணயாளர்களை வைத்து பிணைக் கொடுத்த நீதிபதி இவ் வழக்கு 28.03.2024 அன்று மன்றில் அமைக்கப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.