கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்

(அஸ்லம் எஸ். மெளலானா)

கல்முனை மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடையும் என
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.

பொது மக்களுக்கான சேவைகளை ஒரே கூரையின் கீழ் இலகுவாக வழங்கும் பொருட்டு மாநகர சபையின் முகப்பு அலுவலகத்தில் டிஜிட்டல் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள Onestop Service புது வருடத்துடன் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகின்றது.

இங்கு பொது மக்களும் வர்த்தகர்களும் உரிய ஆவணங்களுடன் சோலை வரி மற்றும் சேவைக் கட்டணங்களை செலுத்திவிட்டு, இங்கிருந்தவாறே தமக்கான சேவைகளை இலகுவாக நிறைவு செய்து கொண்டு செல்ல முடியும்.

இதன் மூலம் கடந்த காலங்களில் சேவைகளை பெற்றுக் கொள்வதில் நிலவி வந்த கால தாமதங்கள் மற்றும் தேவையற்ற அசெளகரியங்கள் முற்றாக தவிர்க்கப்படுவதுடன் தம்மால் செலுத்தப்படுகின்ற வரிகள் மற்றும் கட்டணத் தொகைகளுக்கு முழுமையான உத்தரவாதமளிக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் மாநகர சபையின் வருமானப் பிரிவில் இடம்பெற்ற நிதி மோசடியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அரச அங்கீகாரம் பெற்ற வயம்ப அதிகார சபையினால் வடிவமைக்கப்பட்ட செயலி ஊடாகவே சோலை வரி உட்பட அனைத்து அறவீடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அலுவலக நாட்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை சோலை வரி உட்பட அனைத்து சேவைக் கட்டணங்களையும் இங்கு செலுத்த முடியும். இச்செயற்பாடு தினமும் பிற்பகல் 3.00 மணியுடன் முடிவுறுத்தப்பட்டு, அறவிடப்பட்ட பணம் வங்கியில் வைப்பிலிடப்படுவதால், அதன் பின்னர் எக்காரணம் கொண்டும் அறவீடுகளை மேற்கொள்ள முடியாது என்பதை பொது மக்களும் வர்த்தகர்களும் கவனத்திற் கொண்டு, ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்- என்று அவர்  வலியுறுத்தியுள்ளார்.