குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம்
( வாஸ் கூஞ்ஞ)
முடி சூட்டப்பட்ட மடு அன்னையின் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் பயணித்து வரும் மடு அன்னை புதிய பங்காகிய கீழியன்குடியிருப்பு பங்குக்கான வருகை பெரும் ஆசீர்வாதமாகும் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
முடி சூட்டப்பட்ட மடு அன்னையின் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுரூபம் கடந்த 7 ஆம் திகிதி (07.01.2024) தொடக்கம் இம்மாதம் 26 ந் திகதி வரை பங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
இந்த வகையில் எட்டாவது பங்காக கீழியன்குடியிருப்பு பங்குக்கு அன்னையின் திருச்சுரூபம் வியாழக்கிழமை (11) கொண்டு வரப்பட்டபோது அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பு பங்குதந்தை அருட்பணி லோறன்ஸ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
இத்திருச்சுரூபத்துடன் பயணிக்கும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் இங்கு உரையாற்றுகையில்;.
மருதமடு அன்னையானவள் கீழியன்குடியிருப்பு சமூகத்தை இங்கு தேடி வந்திருப்பது அவளுடைய ஆசீர்வாதமும் பரிந்துரையும் கிடைக்கப் பெறுவது மகிழ்ச்சிக்குரியது.
1924 ஆம் ஆண்டு மருதமடு திருப்பதியிலே மடு அன்னைக்கு ஆனி மாதம் 2 ஆம் திகதி முடிசூட்டப்பட்ட நூறாவது ஆண்டு விழாவை இத்தினத்லே மடுத் திருப்பதியிலே சிறப்பாக கொண்டாட இருக்கின்றோம்.
மடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட நினத்தை கொண்டாடும் முகமாக 1949 ஆம் ஆண்டு 25 வது யூபிலி தினத்தையும் 1974 ஆம் ஆண்டு 50 வருடங்களையும் மிண்டும் 2000 ஆம் ஆண்டு 75 வருடங்களையும் 2024 ஆம் ஆண்டு நாம் 100 வது ஆண்டை முன்னிட்டு எமது பங்குகளுக்கு நாம் அன்னையை கொண்டு செல்லுகின்றோம்.
இதற்கு முதல் மூன்று முறையும் அன்னையானவள் வருகை தந்தபோது இந்த பங்குக்கு அன்னை வருகை தரவில்லை. காரணம் அப்பொழுது இந்த பங்கு பேசாலை பங்கோடு இணைந்து இருந்தது.
ஆனால் இப்பொழுது இது ஒரு தனிப்பங்காக உருவெடுத்துள்ளது. இதனால் அன்னையானவள் உங்கள் பங்குக்கு முதல் முறையாக வந்திருப்பது பெரும் ஆசீர்வாதமாக இருக்கின்றது.
சிலுவை அடியிலே இயேசு யோவானை இதோ உனது தாய் என அன்னையை காண்பித்தார். இவ்வாறு தாயை நோக்கி இதோ உமது மகன் என காண்பித்தது எமக்குத் தெரியும்.
ஆகவே எமக்கு தாயாக கையளிக்கப்பட்ட தாயானவள் இன்றைய நாளில் நமது இடம் நோக்கி வந்துள்ளார்.
நாம் அன்னையின் ஆசீரைப் பெறுவதற்து அன்னை வீற்றிருக்கும் மடுத்திருப்பதிக்கு சென்று வந்தோம். வருகின்றோம். ஆனால் இன்று எம்மைத் தேடி வந்திருப்பது எமக்கு பெரும் பாக்கியமே.
கடந்த காலங்களில் அன்னையின் மூலமாக நன்மை அடைந்தவர்கள் பல இலட்சமானவர்கள். அவ்வாறு நீங்களும் நன்மை அடைவீர்கள். அத்துடன் அன்னையின் வருகை மனமாற்றத்துக்குரிய நாளாகவும் இருக்கின்றது என இவ்வாறு தெரிவித்தார்.