மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இடைத்தங்கள் முகாம்களிற்கு களவிஜயம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் நேற்று (10) திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில், ஏறாவூர் 04  இல் அமைந்துள்ள மாஞ்சோலை  மணிமண்டபத்தில்  தங்கியிருந்தவர்களை அரசாங்க அதிபர் சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டார்.குறித்த இடைத்தங்கல் முகாமில் 40 குடும்பங்களை சேர்ந்த 54 நபர்கள்  தங்கியுள்ளதுடன், மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இவர்களுக்கான சமைத்த உணவு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சத்திய சஜந்தன், மாவட்ட தகவல் அதிகாரி வி.ஜீவானந்தன்,
கிராம உத்தியோகத்தர் கோகுல்ராஜ் என பலர் கலந்து கொண்டனர்.