இலங்கையில் தமிழக வீரர்கள் உதவியுடன் பிரமாண்ட ஜல்லிக்கட்டுப் போட்டியும் தைப்பொங்கலை வரவேற்கும் மாபெரும் விழாவும்.

(அபு அலா) தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு, வரலாற்றில் முதல்முறையாக இலங்கையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கிழக்கு மாகாண திருகோணமலை மாவட்ட சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏறு தழுவுதல் என்ற பெயரில் கடந்த (06) ஆம் இடம்பெற்றது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்திலிருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போட்டியில், சுமார் 200 காளை மாடுகள் பங்குபற்றியது.
இலங்கையை ஆட்சி செய்த சோழர்கள் காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடாத்தப்பட்டு வந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றது. அதைத் தொடர்ந்து, சம்பூர் கிராமத்திற்குள் காணப்படும் காளை மாடுகளைக் கொண்டு, அக்கிராம இளைஞர்கள் இந்தப் போட்டிகளை நடாத்தி வந்துள்ளனர்.
எனினும், இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து, முகாம்களில் வாழ்ந்து வந்ததால் அக்காலப்பகுதியில் இந்தப் போட்டிகளை நடாத்த முடியாமல் போனதாகவும், மீண்டும் அம்மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் இப்போட்டிகளை நடாத்தி வந்ததாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
”தைப் பொங்கலை முன்னிட்டு ஏறு தழுவுதல் போட்டிகளை சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் நடாத்திக்கொண்டு வருவதாகவும் கடந்த ஐந்து ஆண்டு காலமாக இந்தப் போட்டியை மிகச் சிறப்பாக நடாத்தி வருவதாகவும் அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தின்போது இந்தப் போட்டிகளை தங்களால் நடாத்த முடியாமல் போனது. இடம்பெயர்ந்து வாழ்ந்ததன் காரணமாக இப்போட்டியை வெளி ஊர்களிலும் செய்ய முடியவில்லை. எனினும், இவ்வாண்டுக்கான போட்டியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் அவரோடு இணைந்த குழுவினரின் முழுமையான ஆதரவுடனும், மாட்டு உரிமையாளர்களின் ஒத்துழைப்புடனும், சம்பூர் மக்களின் பங்களிப்புடனும் மிகச் சிறப்பாக இதை நடாத்தியுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை காலமும் நடாத்தப்பட்ட போட்டிகளில் 50 மாடுகள் வரை பங்குபற்றியது. திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஈச்சிலம்பற்று, சம்பூர், 6 ஆம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் மாடுகளை அழைத்துவந்து இப்போட்டிகளில் பங்குபெறச் செய்தனர். முன்பு மாடுகளைத்தேடி நாங்கள் சென்றோம். இப்போது மாடுகள் எங்களைத் தேடி வருகின்றன. இப்போது ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கிலேயே பலர் காளை மாடுகளை வாங்கி வளர்த்தும் வருகிறனர் என்று ஜல்லிக்கட்டு நடாத்தும் குழுவினர் தெரிவித்தனர்.
குறிப்பாக, இந்த விளையாட்டு முதல் முறையாக தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட காரணத்தால், வெளி உலகத்திற்குத் தெரியவந்ததை எண்ணி அக்குழுவினரும், அக்கிராம மக்களும், ஜல்லிக்கட்டு விளையாடும் நோக்கில் காளை மாடுகளை வாங்கி வளர்த்து வருகிறவர்களும் மகிழ்ச்சிடைவதாகத் தெரிவித்தனர்.
இலங்கையில் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் நடாத்தப்பட்ட ஏறு தழுவுதல் போட்டியை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மீண்டும் ஆரம்பித்துள்ள விடயத்தை எல்லா மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் அக்குழுவினர் தெரிவித்தனர்.
ஏறு தழுவுதல் போட்டி, மாட்டுப் பொங்கல் என்பன தமிழகத்திற்கு மாத்திரமல்ல என்பதையும், தமிழ் கலாசாரத்தை உலகளவில் வாழும் தமிழர்கள் அதைப் பாதுகாக்க வேண்டும். அது எல்லாத் தமிழர்களின் கடமையாகும் என்பதை
முழு உலகிற்கு மிகப் பகிரங்கமாக தனது செயற்பாட்டின் மூலம் செய்து காட்டிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகளை எங்களால் ஒருபோதும் மறக்க முடியாது என்று மூவின மக்களும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதுதொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையில் சோழர் காலத்தில்
இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடந்துள்ளது. அதன் பின்னரான காலப் பகுதியில் இல்லாமல் போனது. இந்தப் போட்டிகளை திரும்ப ஆரம்பிக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் ஆசைப்பட்டார்கள். அதனால், சோழர்களின் காலப் பகுதியில் நடாத்தப்பட்ட இந்த ஏறு தழுவுதல் போட்டியை மிகச் சிறப்பாக உலக மக்கள் திரும்பிப் பார்க்குமளவு மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று இதை ஆரம்பித்தேன் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கம் மற்றும் இலங்கையின் சுற்றுலா அதிகார சபையுடன் இணைந்து இந்த நிகழ்வை நடாத்தினோம். அதுவும் முதல் தடவையாக ஆரம்பித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கான காளை மாடுகளை எவ்வாறு தெரிவு செய்தீர்கள் என ஆளுநரிடம் கேட்டபோது,
”தமிழகத்தில்தான் ஏறு தழுவுதலுக்கான சிறந்த காளைகள் இருக்கிறது. தமிழர்கள் வாழும் பல நாடுகளில் இந்த நிகழ்வு நடாத்தப்படுகின்றது. அந்தந்த ஊரிலுள்ள காளைகளை வைத்தே இதை நடாத்துகிறார்கள். அதேபோன்றுதான் இங்குள்ள காளை வைத்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலன்புரி சங்கத்தின் தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களை இப்போட்டிகளில் பங்குபெறச் செய்ததாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறினார்.
கடந்த (06) ஆம் திகதி இடம்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு மிகப் பெறுமதியான பரிசில்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
மற்றும் இந்நிகழ்வில் பிரதம அதிதி மலேசியா பாராளுமன்ற உறுப்பினர் டட்டுக் ஶ்ரீமுருகன் மற்றும் நடிகர் நந்தா, சிறப்பு விருந்தினர்களாக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் ஒண்டிராஜ், செயலாளர் ராஜா ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த (07) ஆம் திகதி கிண்ணியாவில் நடாத்தப்பட்ட படகோட்டப் போட்டி!
கிண்ணியாவில் 55 படகுகளுடன் 110 போட்டியாளர்கள் பங்கேற்ற படகோட்டப் போட்டி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அததியாக இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் டாக்டர் வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு படகோட்டப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக 100,000/- ரூபாவும், இரண்டாவது பரிசாக 50,000/- ரூபாவும், மூன்றாவது பரிசாக 25,000/- ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
மேலும், திருகோணமலை கடற்கரையில் ஆண்,பெண் இருபாலரும் பங்கேற்ற சிலம்பம் மற்றும் பீச் கபடி போட்டிகளும் இடம்பெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கும்
பெறுமதியான பரிசில்களை வழங்கி வைத்தார்.
வரலாற்று சாதனை படைத்த செந்தில் தொண்டமான்!
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 1008 பொங்கல் பானையுடன் பொங்கல், 1500 பரத நாட்டிய கலைஞர்கள் பங்குகொண்ட பரத நாட்டி நிகழ்வு, 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் மாபெரும் பொங்கல் பெருவிழா கடந்த (08) ஆம் திகதி திருகோணமலை Meckezier stadium இல் இடம்பெற்றது.
இந்த விடயம், இன்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிற மற்றுமொரு சிறப்பம்சமாகவும், இருக்கின்ற அதேவேளை பொங்கல் தினத்தை வரவேற்கும் “பொங்கல் திருவிழா” நிகழ்வுவாக இடம்பெற்ற விடயம் எல்லா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.