மக்களின் விருப்பம் இன்றி அபிவிருத்தி முன்னெடுப்பது சாலச் சிறந்தது அல்ல அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார்.

( வாஸ் கூஞ்ஞ) அபிவிருத்தி என்ற போர்வையில் பேசாலை கிராமம் அழிவு பாதைக்கு இட்டுச் செல்லப்படுகின்றது. இங்குள்ள மக்களின் விருப்பம் இன்றி எதையும் முன்னெடுப்பது சாலச் சிறந்தது அல்ல என பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட பேசாலை தெற்கு கிராம அலுவலகப் பிரிவில் தேசிய ஜனசபை வேலைத்திட்டம் முன்மாதிரி ஜனசபை ஸ்தாபித்தல் நிகழ்வு வியாழக்கிழமை (28) நடைபெற்றது.

இதில் கலந்து கொணட பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளார் தொடர்ந்து உரையாற்றுகையில்

தேசிய ஜனசபை முன்னோடி வேலைத் திட்டதுக்கு பல பகுதிகள் இருக்கின்றபோதும் பேசாலை தெற்கு பகுதி தெரிவு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

அத்துடன் மன்னார் அரசாங்க அதிபராக புதிதாக நியமனம் பெற்று மன்னாருக்கு வந்திருக்கும் புதிய அரச அதிபர் வெளியில் நடைபெறும் முதலாவது நிகழ்வில் கலந்து கொள்வது இங்கேதான் என்பதும் மகிழ்ச்சிக்குரியதே.

ஜனசபை இந்த திட்டமானது  அரசால் முன்னெடுக்கப்பட இருந்தாலும் எமது ஊரிலும் இந்த திட்டம் இங்கு கிடைக்கப் பெற்றதும் எமக்கு மகிழ்ச்சியே.

இத்திட்டத்தின் மூலம் எவ்வாறான நன்மைகள் கிடைக்க இருக்கின்றன என்பதும் எமக்கு உடன் தெரியா விட்டாலும் எமது வளங்கள் எவ்வாறு பயன்பட இருக்கின்றது அல்லது என்ன வளங்கள் எமக்கு கிடைக்க இருக்கின்றன என்பது எமக்கு காலப்போக்கில் தெளிவாகும்.

புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்று இங்கு வருகை தந்திருக்கும் இந்த சமயத்தில் இங்குள்ள மக்கள் சார்பாக நான் அவருக்கு சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடற்பாடு எனக்கு இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் சனத் தொகையில் கூடிய கிராமங்களில் ஒன்றாக பேசாலை கிராமமும் ஒன்றாகும்.

கத்தோலிக்க மக்கள் இங்கு செறிந்து காணப்படாலும் ஏனைய சமய மக்களும் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இங்கு எல்லா மக்களும் எவ்வித பாகுபாடுகள் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அண்மை காலமாக இந்த பேசாலை கிராமம் மழை காலங்களில் வெள்ளத்pனால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறு இல்லாதபோதும் கடந்த இரண்டு வருட காலத்துக்கு முன்பும் இப்பொழுதும் மழை காலங்களில் மக்கள் இடம்பெறும் துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்ல இங்குள்ள மக்கள் டெங்கு நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.

பேசாலை கிராமம் நான்கு கிலோ மீற்றர் சுற்றளவு கொண்டு இருந்தாலும் இரு பக்கத்தாலும் இந்த நீர் வெளியேற முடியாத நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.

பிரதான வீதி அன்மையில் புனரமைக்கப்பட்ட போது திட்டம் இல்லாமல் அதுவும் வாய்க்கால் சரியான முறையில் அமைக்கப்படாமையும் உள்ளக வீதிகள் புனரமைக்கப்படாத நிலைகளே இதற்கு காரணமாகும்.

இங்குள்ள பாடசாலைக்கு முன்னுள்ள வீதியின் நுழை வாயிலிலேயே பெரிய பள்ளம் குளம் போன்று காட்சி அளிக்கின்றது என்றால் ஏனைய உள் வீதிகள் எப்படி இருக்கும் என்பது புலனாகும்.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் கனியவள மணல் அகழ்வு போன்றவற்றால் பேசாலை கிராமம் பெரும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு வருகின்றது.

இதன் ஒரு அங்கமாகவே பேசாலை கிராமம் வெள்ளத்துக்குள் சங்கமமாகும் நிலை எற்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க காற்றாலை இரண்டாம் கட்ட வேலைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் முதலாம் கட்ட திட்டத்திலே மக்கள் சொல்லொண்னா துன்பத்தில் இருக்கும்போது இரண்டாம் மூன்றாம் கட்ட வேலைகள் இங்குள்ள மக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெறுகின்றது.

ஆகவே புதிய அரச அதிபராக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள் இங்குள்ள மக்களின் வாழ்க்கை வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு இங்கு வாழும் மக்களின் விருப்பம் இன்றி எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்று மக்கள் சார்பாக இதை தங்களின் முன்வைக்கின்றேன்.

காற்றாலை மின்சாரம் நாட்டுக்குத் தேவைதான். இதற்கு தடை இல்லை. ஆனால் மன்னார் தீவிலிருந்து இவற்றை மாற்றி அமைக்கவே வேண்டுகின்றோம் என இவ்வாறு வேண்டிக் கொண்டார்.